பிஹார் அமைச்சரவை | நிதிஷ் இடமிருந்த உள்துறை பாஜகவிற்கு ஒதுக்கீடு... BJP-க்கு 14, JDU-க்கு 8 துறைகள்!
பிகாரில் புதிய அமைச்சரவையில் பாஜகவுக்கு முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. நிதிஷ்குமாரின் ஜெ.டி.யு. கட்சிக்கு 8 இலாகாக்கள், பாஜகவுக்கு 14 இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்துறை பாஜகவின் சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 31 வயது இளம் அமைச்சர் ஷ்ரேயசி சிங்கிற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பிகாரில் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் பாஜகவினருக்கே மிகப்பெரிய பங்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் வசம் பொதுநிர்வாகம், அமைச்சரவை செயலகம் உள்ளிட்ட துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் வசம் இருந்த உள்துறை, தற்போது பாஜகவின் துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 26 அமைச்சர்களில் பாஜகவைச் சேர்ந்த 14 பேருக்கு சுகாதாரம், சாலை கட்டுமானம், விவசாயம் போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வரான பாஜகவைச் சேர்ந்த விஜய்குமார் சின்ஹாவுக்கு வருவாய் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 8 இலாகாக்களும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 2 இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா ஒரு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய அமைச்சரவையில் நிதித்துறை பாஜக வசம் இருந்தது. ஆனால், இந்த முறை ஜெ.டி.யு. கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பிஜேந்திர பிரசாத் யாதவிற்கு அத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
31 வயது இளம் அமைச்சரான ஷ்ரேயசி சிங்கிற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெடியு-வின் சுனில் குமாருக்கு கல்வித் துறையும், திலீப் ஜெய்ஸ்வாலுக்கு தொழில் துறையும், லகேந்திரகுமார் பஸ்வானுக்கு பட்டியலின மற்றும் பழங்குடியினர் துறையும் வழங்கப்பட்டுள்ளன. பிரமோத்குமார் சந்திரவன்ஷிக்கு கூட்டுறவு மற்றும் வனத்துறையும், சந்தோஷ்குமார் சுமனுக்கு நீர்வளத் துறை இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 89 இடங்களில் வென்றதால் முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என பாஜக மேலிடம் கூறியதன்பேரில் அமைச்சரவை பகிர்வு நடந்துள்ளது.
முன்னதாக, நடந்து முடிந்த பிகார் தேர்தலில் 202 இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. மேலும், இந்தத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் 101 இடங்களில் சம எண்ணிக்கையுடன் போட்டியிட்ட நிலையில், 89 இடங்களில்பாஜகவும், 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 20 ஆம் தேதி பிகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றிருந்தார்.

