“வேலை கிடைக்கவில்லை; சர்வாதிகாரம் ஒழிக” - நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கம் எழுப்பிய பெண் சொன்னதென்ன?

நாடாளுமன்ற அவையில் அத்துமீறி நுழைந்த இருவர் அவையிலேயே வண்ணப்புகை வீசிய சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ளது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்pt web

குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் மக்களவையில் சுமார் 100 எம்.பிக்கள் வரை இருந்தனர். மக்களவையில் வழக்கமான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர் மாடத்தில் 30 முதல் 40 பேர் வரை அமர்ந்து அமைதியாக இருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். பூஜ்யநேரம் நடந்து கொண்டிருந்தபோது, அவர்களில் இரண்டு பேர் திடீரென அவைக்குள் எகிறி குதித்தனர்.

மேஜை மீது ஏறிக்குதித்து ஓடியதால் மக்களவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சியடைந்தனர். போராட்டங்களின்போது பயன்படுத்தப்படும் வண்ணங்களை உமிழும் புகைக்குப்பிகளை அவர்களில் ஒருவர் வீசினார். மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரையும் அங்கிருந்த எம்பிக்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

இதேநேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் 2 பெண்கள் சிவப்பு வண்ண வாயுவை புகைக்குப்பியில் இருந்து வீசி முழக்கங்களை எழுப்பினர். அவர்களை பாதுகாவலர்கள் கைது செய்தனர். அப்போது அவர்களில் ஒரு பெண், 42 வயதாகியும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், சர்வாதிகாரம் ஒழிக என்றும் முழக்கமிட்டபடி சென்றார்.

மக்களவை
மக்களவைpt web

மக்களவையில் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தபோது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் அவையில் இருந்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் யாரும் அவையில் இல்லை. சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் புதிய முதலமைச்சர்கள் பதவியேற்புக்கு பிரதமர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளநிலையில் அவற்றை மீறி நடந்துள்ள இந்த அத்துமீறல் பெரும் அதிர்வுகளையும் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com