பிரதமராகவே இருந்தாலும் அனுமதி கிடையாது: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
ராஜஸ்தானின் கோட்டா நகரில் எந்தவொரு விஐபிக்கள் விமானமும் தரையிறங்க அனுமதிக்க முடியாது; அது பிரதமர் மோடியின் விமானமாகவே இருந்தாலும் அனுமதி கிடையாது என்று அந்த தொகுதி பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டா நகரில் உள்ள அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை பாஜக எம்எல்ஏ பவானி சிங் ரஜாவாத் திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய ரஜாவாத், கோட்டா நகரில் விமானநிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கோட்டாவில் விமான நிலையமே இல்லாதபொழுது பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைத்து என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எந்த விஐபிக்களின் விமானத்தையும் கோட்டாவில் தரையிறங்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட ரஜாவத், அது பிரதமர் மோடியின் விமானமாகவே இருந்தாலும் அனுமதி கிடையாது என்று பேசினார். ராஜஸ்தானில் வசுந்த்ரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.