சாதனைப் பெண்களுக்கு சர்ப்ரைஸ்: சஸ்பென்ஸை உடைத்தார் மோடி..!
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கக்கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. இவர் நேற்று, ‘இந்த ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த ட்விட்டர் பதிவு நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது. எதற்காக, சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன.
பிரதமர் மோடி ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தள கணக்குகளில் இருந்து வெளியேறக் கூடாது என்று #NoSir, #NoModiNotwitter போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன. மேலும், இந்த ஹேஷ்டேக்குகளில் பலரும் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறக் கூடாது என அன்போடு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவது குறித்து நேற்று பதிவிட்டது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றினை நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த மகளிர் தினத்திற்கு, மற்றவர்களுக்கு உந்து சக்தியாக வாழும் பெண்களுக்காக என்னுடைய சமூக வலைத்தளத்தை விட்டுக் கொடுக்கிறேன். இது, லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த உதவும். அப்படிப்பட்ட பெண்களா நீங்கள் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் உங்களைப்பற்றி பதிவிடுங்கள்’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைத்தள கணக்குகளை ஒரு நாள் முழுவதும் நிர்வகிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு
உங்களுடைய வாழ்க்கையும், பணியும் உலகத்திற்கு உந்துசக்தியாக உள்ளதா? வித்தியாசமான வாழ்க்கையைக் கொண்ட பெண்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அத்தகைய பெண்களின் வாழ்க்கை குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிடுங்கள்.
அதேபோல், அத்தகைய பெண்கள் குறித்து நீங்கள் வீடியோக்களை எடுத்து யூ டியூப்பில் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிடுங்கள்
அந்தப் பதிவுகளில் இருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நரேந்திர மோடியின் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் உந்துசத்தி வாழ்க்கை குறிப்பை உலகறிய பதிவிட அனுமதிக்கப்படுவார்கள்
உங்கள் கருத்துகளையும், எண்ணங்களையும், உலகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!” என்ற தகவலையும் அவர் இணைத்து இருந்தார்.