”சார்.. நகை, பணத்த பறிக்க பாக்குறாங்க” - போலீசுக்கே செக் வைத்து அதிரடி காட்டிய பெண் IPS!

”சார்.. நகை, பணத்த பறிக்க பாக்குறாங்க” - போலீசுக்கே செக் வைத்து அதிரடி காட்டிய பெண் IPS!
”சார்.. நகை, பணத்த பறிக்க பாக்குறாங்க” - போலீசுக்கே செக் வைத்து அதிரடி காட்டிய பெண் IPS!

குற்றச் செயல்களை கண்காணிக்கும் போலீசாரையே ஒருவர் கண்காணித்தால் எப்படி இருக்கும்? ஏனெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காவல்துறையினரே சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபடுவது குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம்தான் இருக்கிறது. ஆகையால் போலீசாரையே கண்காணிக்கும் கோரிக்கைகளும் அவ்வப்போது எழுவது வழக்கம்.

இந்த நிலையில், தனக்கு கீழே பணியாற்றும் காவல்துறையினரை மாறுவேடத்தில் சென்று பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்காணித்து எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதை சோதித்து பார்த்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தர பிரதேசத்தின் அவ்ரியா மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரான சாரு நிகம் என்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரிதான் திடீர் விசிட் செய்து பரபரக்கச் செய்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு அவ்ரியா மாவட்ட காவல் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்த சாரு நிகம் கண்டிப்போடு இருப்பதோடு மக்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்வதிலும் கெட்டியாக இருந்து வருகிறாராம். சாரு நிகம் எங்கு பணியாற்றுகிறாரோ அங்கு ரவுடிகளின் அட்டகாசம் முடிவுக்கு வருவது வாடிக்கையாக இருக்கிறது.

அந்த வகையில் அவ்ரியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியான குற்ற நிகழ்வுகள் நடந்து வந்த நிலையில்தான் சாரு நிகம் அங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் குற்றச் செயல்களை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் சாரு நிகம். அப்படி இருக்கையில், போலீசார் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள், பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக சாரு நிகம் களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி, சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மூடி, கூலிங் கிளாஸ் அணிந்து ஒரு பகுதிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு இருவரை பைக்கில் வரவைத்து, காவல் கட்டுப்பாட்டு எண்ணான 112க்கு போன் செய்ய வைத்து, தன்னிடமிருந்து நகை, பணத்தை இருவர் திருட முற்படுவதாக புகார் கூறியிருக்கிறார். அதற்கு மறுமுனையில் இருந்து “கவலைப்பட வேண்டாம்; சிறிது நேரத்திற்குள்ளேயே அந்த இடத்துக்கு போலீசார் வருவார்கள்” எனக் கூறியதும் சொன்னபடியே போலீஸ் வாகனம் வந்திருக்கிறது.

சாரு நிகமின் இந்த சோதனையில் போலீசார் பாஸ் ஆகவே அவர்களது வேலை திருப்திகரமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்களை அவ்ரியா மாவட்ட காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு, பெண் போலீசின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com