நொய்டாவில் பால்கனியில் இருந்து விழுந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம் அடைந்தார். இது விபத்தா...? அல்லது கொலையா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்தவர் ராதிகா கவுசிக். வயது 25. இவர் தங்கியிருந்த குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். இதனிடையே ராதிகாவை அவரது சக ஆண் ஊழியரே தள்ளிவிட்டு கொன்றிருக்கலாம் என அவரது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராதிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதனை வைத்தே கொலையா..? அல்லது தற்செயலான விபத்து என்பது தெரியவரும்.
சம்பவம் நடந்த அன்று ராதிகாவுடன் அவரது சக ஆண் ஊழியர் ஒருவரும் இருந்துள்ளார். அதிகாலை 3.20 மணியளவில் தான் ராதிகா பால்கனியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளார். ராதிகாவின் பெற்றோர்கள் கூறும்போது, “ சக ஊழியர்தான் அவரை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம். என் மகளுக்கு குடிப்பழக்கம் இல்லை. இறப்பதற்கு முந்தைய நாளில் கூட எங்களுடன் நன்றாக தொலைபேசியில் பேசினார்” என கூறியுள்ளனர்.
அதேசமயம் அருவடன் இருந்த ஆண் சக ஊழியர் கூறும்போது, “ ராதிகா அப்போது மது அருந்தியிருந்தார். அவர் எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். அப்போது நான் பாத்ரூமில் இருந்தேன்” என கூறியுள்ளார். எனவே ராதிகா இறந்தது தற்செயலான விபத்தினாலா..? அல்லது கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.