ஆந்திரா|கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை மரத்தில் கட்டி அடித்த கொடூரம்!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளார். இதனிடையே, திம்மராயப்பன் அப்பகுதியை சேர்ந்த முனிகண்ணப்பா என்பவரிடம் வட்டிக்கு ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திம்மராயப்பன் குடும்பத்துடன் அருகே உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்று வாழ்ந்துள்ளார்.
இதனையறிந்த முனிகண்ணப்பா, கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்நிலையில், தனது மகனின் பள்ளி சான்றிதழை வாங்குவதற்காக திம்மராயப்பனின் மனைவி ஸ்ரீஷா இன்று (19.6.2025 நாராயணபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த முனிகண்ணப்பா தனது கூட்டாளிகளுடன் சென்று ஸ்ரீஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடனை திருப்பிக் கேட்டு தனது கூட்டாளிகளோடு சென்ற முனிகண்ணப்பா ஸ்ரீஷாவை ஆபாசமாக பேசி அவரை தாக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேப்ப மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார் .
கணவன் வாங்கிய ரூ. 80 ஆயிரம் பணத்தை வட்டியுடன் உடனடியாக தரும்படி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஸ்ரீஷாவை மீட்டனர். .
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முனிகண்ணப்பா மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தாக்குதல் தொடர்பாக 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதல் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.