போலி ஐ.டி கார்டு மூலம் அதிகாரியான பெண் - 18 மாதம் ராஜ வாழ்க்கை

போலி ஐ.டி கார்டு மூலம் அதிகாரியான பெண் - 18 மாதம் ராஜ வாழ்க்கை
போலி ஐ.டி கார்டு மூலம் அதிகாரியான பெண் - 18 மாதம் ராஜ வாழ்க்கை

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஷோயா கான் என்ற பெண் டெல்லியில் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். அதன்பின்னர் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என நினைத்த இவர், அதற்காக கடந்த 2007ஆம் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசை அவரைவிட்டு போகவில்லை. தான் நினைத்ததை அடைய சில குறுக்கு வழிகளை அவர் கையாண்டுள்ளார்.

அதன்படி, இவர் தனது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என போலியான ஐ.டி கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அத்துடன் போலியான இ-மெயில் ஐ.டி-யை உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி செல்போன் செயலிமூலம் தனது குரலை ஆண் குரலாக மாற்றி பேசியுள்ளார். இவரது கணவர் வங்கியில் வேலை செய்து, அங்கிருந்து வெளியேறியவர். இவருக்கும் இதேபோன்று போலியான ஐ.டி கார்டு உள்ளிட்டவற்றை ஷோயா தயாரித்துக்கொடுத்துள்ளார். இதன்பின்னர் ஒரு அரசு அதிகாரி போலவே ஷோயா வலம்வற தொடங்கியுள்ளார். 18 மாதங்கள் இவர் ஒரு அதிகாரி போலவே இருந்துள்ளார். இதை அறியாமல் காவல்துறையினர் இவருக்கு பாதுகாப்பு போலீஸ்களை பணியமர்த்தியுள்ளனர்.

கடந்த வாரம் ஷோயா உத்தரப் பிரதேசம் மீரட்டில் நடந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கும் ஒரு அதிகாரி போல் வலம், இவரை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் நினைத்துள்ளனர். பல காவல் அதிகாரிகளும் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர். இந்நிலையில் இவர் நொய்டாவின் கவுதம் புத்த நகர் எஸ்.எஸ்.பி வைபாவ் கிருஷ்ணாவை செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸை அனுப்பிவைக்க தாமதப்படுத்தியதாக திட்டியுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர் வீட்டை சோதனை, விசாரணை உத்தரவிட்டுள்ளனர்.

இதில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த விசாரணையில் அவர் உண்மையான அதிகாரியே இல்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் போலியான ஐ.டி. கார்டை தயாரித்து 18 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அத்துடன் 2 சொகுசுக் கார்கள், 2 லேப்டாப்கள், 2 போலி ஐ.டி கார்டுகள், 2 வாக்கி டாக்கிகள், 4 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். 

அவரது கணவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர் ‘கோ டாடி’ என்ற இணையதளத்தில் பணம் செலுத்தி போலியான இணைய தளம் ஒன்றையும் உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அரசியல் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் போலியான ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபடும் நபர் தான் என்றும், இவருக்கு வெளிநாட்டில் இருக்கும் ஏஜென்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com