எச்சரிக்கையை மீறி காட்டுக்குள் சென்ற பெண்ணை அடித்துக்கொன்றது புலி
வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி காட்டுக்குள் சென்ற பெண்ணை, புலி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது தனக்பூர். இந்திய-நேபாள எல்லை பகுதியான இது மலைப்பிரதேசம். இங்குள்ள மக்கள் விறகுக்காகவும் உணவுக்காகவும் காட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். பெண்கள் தினமும் காலை, மாலை என இரண்டு வேளை காட்டுக்குள் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என்றும் புலி நடமாடுவதாகவும் எச்சரிக்கை செய்தனர். ’காட்டை நம்பிதான் எங்கள் வாழ்க்கை இருக்கிறது. அதைவிட்டுவிட்டு வாழ முடியாது’ என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் எச்சரிக்கையை மீறி கடந்த புதன்கிழமை காட்டுக்குள் சென்ற ஹேமாதேவி என்ற பெண்ணை, புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் புலியை கொல்ல வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.