ரோட்டில் தவித்த கர்ப்பிணிக்கு உதவிய போலீஸ்: காரில் பிறந்தது அழகான குழந்தை!
ரோட்டில் தவித்த கர்ப்பிணியை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார் போலீஸ்காரர். ஆனால் அவரது காரிலேயே குழந்தை பிறந்துவிட்டது.
மங்களூரு அருகில் உள்ள உல்லால் பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். நிறைமாத கர்ப்பிணி. நேற்று காலை இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சகோதரர் நவ்ஷத்துடன் ஆட்டோவில் அரசு மருத்துவமனை செல்ல முயன்றார். அவர்கள் இடத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் இருந்தது மருத்துவமனை. ஒரு ஆட்டோவை பிடித்து ஏறினார். ஆட்டோ குலுங்கிக் குலுங்கி சென்றது. அது சரியாக இருக்காது என்று நினைத்த அவர்கள் எக்கு என்ற இடத்தில் இறங்கினர். நடுரோட்டில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஒரு கார் அவர்கள் முன் வந்து நின்றது. காரை ஓட்டி வந்தவர் ஒரு முஸ்லிம் குடும்பம் நடுரோட்டில் நிற்பதை அறிந்து ஏதும் பிரச்னையோ என்று சந்தேகத்தில் விசாரித்தார்.
அவர்கள் நிலைமையை சொன்னதும் உடனடியாக காரின் பின் பக்கம் ஏறச்சொன்னார். மருத்துவமனைக்கு வேகமாக சென்றார். ஆனால் வழியிலேயே அவர், குழந்தையின் அழுகுரலைக் கேட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர்களை சேர்த்துவிட்டு வந்தார்.
இதுபற்றி நவ்ஷத் கூறும்போது, ‘என்ன செய்யலாம் என்று நடுரோட்டில் தவித்தபோது காரை நிறுத்தினார். அவர் போலீஸ் காரர். பெயர் ரவிக்குமார். அவர் இல்லையென்றால் சிக்கலாகி இருக்கும். என் தங்கையை அவர் காப்பாற்றிவிட்டார். குழந்தை பிறந்ததும் காரின் பின்பகுதி ரத்தமாக இருந்தது. அதைக் கழுவி தருகிறேன் என்று சொன்னேன். அவர் மறுத்துவிட்டார். அந்த நல்ல மனதை நினைத்து மகிழ்ந்தேன்’ என்றார்.
போலீஸ்காரர் ரவிக்குமார் கூறும்போது, ’ இது சாதாரண விஷயம்தான். ஸ்கூலில் குழந்தைகளை விட்டுவிட்டு வந்தேன். அவர்கள் உதவி கேட்டார்கள். அவசரம் உணர்ந்து காரின் பின்பகுதியில் உட்கார வைத்தேன். சரியான நேரத்துக்குள் மருத்து வமனை செல்ல நினைத்து வேகமாக ஓட்டினேன். அதற்குள் குழந்தையின் முதல் அழுகையை கேட்டேன். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் என் கடமையைதான் செய்தேன்’ என்றார்.
இதையடுத்து மதம் தாண்டி மனித நேயத்துடன் செயல்பட்ட போலீஸ்காரர் ரவிக்குமாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.