பெண் வீட்டார் 25 லட்சம் வரதட்சணை தராததால், திருமணமாகி 19 ஆண்டுகள் கழித்து ஒருவர் தலாக் முறையில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இத்தம்பதியினர் கடந்த 2013-ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தது. கணவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், அவரது 42 வயது மனைவியிடம் 25 லட்சம் வரதட்சணையை அவரது வீட்டாரிடம் வாங்கி வந்தால் மட்டுமே தன்னுடன் இருக்க முடியும் என்று மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வாட்ஸ் ஆப் கால் மூலம் மனைவியை தொடர்பு கொண்ட கணவர் அவரிடம் மூன்று தலாக் கூறி அவரை விவாகரத்து செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த அந்தப் பெண்மணி காவல் நிலையில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண்மணி இது குறித்து கூறும் போது “ கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே எனது பெற்றோரிடம் இருந்து 25 லட்சத்தை வாங்கி வரும் படி கணவர் நச்சரித்து வந்தார். 25 லட்சத்தை வாங்கி வந்தால் மட்டுமே அவருடன் வாழ முடியும் என எச்சரித்து வந்த அவர் தொடர்ந்து என்னை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினார்.” என்று கூறினார்.
இந்தச் செய்தியை கேள்விப்பட்ட மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுதான் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது “ இஸ்லாம் சகோதரி வரதட்சணை தரவில்லை என்பதால் அவரது கணவர் அவரை தலாக் முறையில் விவாகரத்து செய்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்மணியை தொடர்பு கொண்ட நான், மத்தியப் பிரதேச போலீஸார் அவருக்கான நீதியைப் பெற்று தருவார் என உறுதியளித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து செய்யப்பட்ட அந்தப் பெண்மணி அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தலாக் முறையில் விவாகரத்து செய்யும் முறை தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.