12 சிங்கங்கள் சுற்றி நிற்க, நடுக்காட்டில் நள்ளிரவில் ஒரு பிரசவம்!
நடுக்காட்டில் 12 சிங்கங்கள் சுற்றி நிற்க, ஆம்புலன்ஸில் நடந்த பிரசவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இருக்கிறது லுன்சாபூர் கிராமம். மலைக்கிராமமான இந்த ஊரைச் சேர்ந்தவர் மங்குபென் மக்வானா. 32 வயது பெண்ணான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த புதன்கிழமை நள்ளிரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆன்புலன்ஸுக்கு அவரது குடும்பத்தினர் போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வந்தது. மங்குபென்னை அதில் ஏற்றினர். வலியால் துடித்துக்கொண்டிருந்தார் அவர். அவரைப் பார்த்த ஆம்புலன்ஸ் உதவியாளர், ஜபாராபாத் அரசு மருத்துவமனைக்கு வண்டி செல்லும் முன்பே குழந்தை பிறந்துவிடும் என நினைத்தார். காட்டுக்குள் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. திடீரென பத்து பதினைந்து சிங்கங்கள் நடுரோட்டில் வந்து நின்றன.
இதை எதிர்பார்க்காத டிரைவர் ராஜூ யாதவ், ’இங்க பார்றா’ என்று வண்டியை நிறுத்தினார். சிங்கங்கள் சென்ற பிறகு ஆம்புலன்ஸை எடுக்கலாம் என நினைத்து பொறுமை காத்தார். ஆனால் அவை நகர்வதாக இல்லை.
இந்த நேரத்தில் மங்குபென் வலியால் துடிக்க, நிலமையை உணர்ந்த ஆம்புலன்ஸ் உதவியாளர், ஆபத்துக்கு பாவமில்லை என டாக்டருக்கு போன் செய்தார். அவரிடம் ஆலோசனை கேட்டு அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அழகான குழந்தை பிறந்தது. இந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் அருகிலேயே சிங்கங்கள் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்தன கொட்டாவி விட்டபடி.
பின்னர் ராஜூ, லைட்டை ஆன் செய்து வண்டியை ஸ்டார்ட் பண்ண, சிங்கங்கள் மெதுவாக நடையை கட்டின. பின்னர் மருத்துவமனையில் தாயும் சேயும் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இப்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடுகாட்டில் சிங்கங்கள் புடைசூழ, தனக்கு குழந்தை பிறந்ததை மங்குபென் மக்வானா வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்.