ராஜஸ்தான்: கணவனுடன் சண்டை; 5 பெண்குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்
ராஜஸ்தானில் கணவனுடன் ஏற்பட்ட தொடர் சண்டையால் மனமுடைந்த மனைவி 5 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஜோரன் பகுதியிலுள்ள கலியாஹேதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ்லால் பன்ஜாரா. கம்பளம் மற்றும் துணி விற்கும் தொழில் செய்யும் இவருக்கு திருமணமாகி 7 பெண் குழந்தைகள் உள்ளனர். சிவ்லாலுக்கும் அவரது மனைவி பத்மாதேவிக்கும்(40) இடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் பக்கத்து கிராமத்திலுள்ள அவருடைய உறவினர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இரங்கல் கூட்டத்திற்கு கலந்துகொள்ள சனிக்கிழமை இரவு கிளம்பிச்சென்றுள்ளார் சிவ்லால். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பத்மாதேவி தனது குழந்தைகளான சாவித்ரி(14), அன்காலி(8), காஜல்(6), குஞ்சன்(4) மற்றும் அர்ச்சனா(1) ஆகிய 5 பேருடன் வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கிராமத்தார் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயத்ரி(15) மற்றும் பூனம்(7) ஆகிய இரண்டு பேரும் தூங்கிக்கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்திய சட்டப்பிரிவு 174இன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.