மகன் இல்லையென விரக்தி : 5 மகள்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
மகன் இல்லையென்ற என்ற தவறான எண்ணத்தால் 5 மகள்களை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி காலா கிராமத்தை சேர்ந்தவர் ரானாராம். இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேணு தேவி (38). இந்த தம்பதியினருக்கு சந்தோஷி (13), மம்தா (11), மேனா (9), ஹன்சா (6), ஹேமலதா (3) என 5 மகள்கள் இருந்தனர். மகன் பிறக்கவில்லை.
இதனால் தாய் வேணு தேவி நீண்ட நாட்களாக கவலையில் இருந்துள்ளார். மகள்களை விட பெரிய செல்வம் உலகில் இல்லையென்பதை உணராத அந்த தாய், தனது கணவர் பணிக்கு சென்ற நேரம் பார்த்து விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தனது 5 மகள்களை இரக்கமின்றி கிணற்றில் தள்ளி கொன்றுள்ளார். பின்னர் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், கிணற்றில் இருந்த 6 உடல்களை மீட்டனர். உயிரிந்த பெண்கள் குழந்தைகளில் 4 பேர் படிப்பில் கில்லாடிகள் என அக்கம்பக்கத்தினர் கூறி வருந்தியுள்ளனர். இந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியமால், 4 பேரும் இரண்டு நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

