கொரோனாவிலிருந்து மீண்டவருக்காக 8 மணிநேரம் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்! - 1 லட்சம் பரிசு
மணிப்பூரில் கொரோனா வைரசிலிருந்து மீண்டவரை இரவில் ஆட்டோவில் அழைத்துச் சென்று வீட்டில் சேர்த்த பெண்ணை முதலமைச்சர் ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டினார்.
மணிப்பூரின் கம்ஜாங் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட நபர் வீடு செல்ல முடியாமல் தவித்துள்ளார். அவரது வீடு இருப்பது வேறு மாவட்டம் என்பதால் அவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கொல்கத்தாவிலிருந்து திரும்பிய அந்த நபர் சிகிச்சையால் கொரோனாவிலிருந்து இருந்து மீண்ட போதிலும், வீடு திரும்ப முடியவில்லை என்ற வருத்தத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது மணிப்பூரின் இம்பால் நகரத்தைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநரான லய்பி ஒய்னம் என்பவர், கொரோனாவிலிருந்து மீண்டவருக்கு உதவ முன்வந்துள்ளார். ஆட்டோவில் மே 31ஆம் தேதி இரவு கொரோனாவிலிருந்து மீண்டவரை அழைத்துக்கொண்டு புறப்பட்ட ஒய்னம், இரவு முழுவதும் 8 மணி நேரம் ஆட்டோ ஓட்டிய பின்னர் காலையில் மலைப்பகுதி மாவட்டத்தில் உள்ள அந்நபரின் கிராமத்திற்குச் சென்றடைந்துள்ளார்.
அவரது இந்த மனிதாபிமான செயலை ஊக்குவிக்கும் வகையில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் நேரில் அழைத்துப் பாராட்டினார். அத்துடன் ரூ.1,10,000 ஊக்கத்தொகையை வழங்கினார். இந்தத் தொகை தொழில்முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கியது எனவும் தெரிவித்தார். இரண்டு மகன்களுக்குத் தாயான ஒய்னம், தனது வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.