வரதட்சனை பணத்திற்காக ஆணைப் போல் நடித்து இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி சென் என்ற பெண். இவர் முகநூலில் கிருஷ்ணா சென் என்கிற ஆண் பெயரில் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்கு ஒன்றினை தொடங்கியுள்ளார். அந்த முகநூலில் ஆண் வேடமிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பின்னர் பல பெண்களுடன் சாட்டிங் செய்துள்ளார். பின்னர், இரண்டு பெண்களை சென் எப்படியோ திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதலில், முகநூலில் நண்பரான ஹல்வானி பகுதியை பெண்ணை 2014-ம் ஆண்டு நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணிடம் தான் அலிகாரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு மாஸ்டர் டிகிரி பெற்ற அந்தப் பெண்ணை, சென் வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் இருந்து ரூ.8.5 லட்சம் வரதட்சனையாக பெற்று தொழில் தொடங்கியுள்ளார். இந்நிலையில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலதுங்கி நகரைச் சேர்ந்த பெண்ணை மோசடி செய்து சென் திருமணம் செய்துள்ளார்.
கலதுங்கி நகரைச் சேர்ந்த இரண்டாவது மனைவிக்கு கிருஷ்ணா சென் ஆண் அல்ல பெண் தான் என்பது தெரியவந்தது. இது குறித்து சென்னிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு தான் வாங்கிய வரதட்சனை பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக உறுதி அளித்ததால் இரண்டாவது மனைவி அமைதியாகவிட்டார். மேற்கொண்டு உண்மையையும் வெளியில் சொல்லவில்லை.
இதனிடையே, காத்கோடம் பகுதியைச் சேர்ந்த முதல் மனைவி, வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாக சென் மீது ஹால்வானி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பெயரில் ஸ்வீட்டி சென் கைது செய்யப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில், “சிறு வயது முதலே நான் முரட்டுத்தனமான ஆண் போலவே இருந்து வந்தேன். அதனால் ஒரு ஆண் மகன் போலவே நடித்தேன். ஆண்களைப் போல் எனக்கு அழகான முடி இருந்தது. அதேபோல், இருசக்கர வாகனம் ஓட்டும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது” என்று ஸ்வீட்டி சென் கூறியுள்ளார்.
பின்னர், போலீசார் மருத்துவ ரீதியான சென்னுக்கு சோதனை நடத்தி பெண் என்பதை உறுதி செய்தனர். மேற்கொண்டு சென்னின் திருமணத்திற்கு வந்த அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.