பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காததால் மொட்டை அடித்த பெண்
உத்தரப்பிரதேசம் பாஜக தலைவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த பாஜக பிரமுகர் சதீஷ் ஷர்மா. இவர் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்தப்பெண், மூத்த வழக்கறிஞரும்,பாஜக பிரமுகருமான சதீஸ் சர்மா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கடந்த மூன்று வருடங்களாக தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக தெரிவித்தார். மேலும் தன்னை அந்த நபர் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறினார். என்னுடைய தலைமுடி பாதியை அவர் வெட்டி விட்டார். அவர் மிகப்பெரிய தலைவராக இருப்பதால் அரசியல் செல்வாக்கு அவருக்கு உள்ளது. அவர் எனது குடும்பத்தினரை மிரட்டுகிறார். நான் ஒரு தலித்தாக இருப்பதால்தான் இந்தப் பிரச்னைகளை எல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது. காசிப்பூர் காவல்நிலையத்தில் சதீஷ் சர்மா மீது புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் என்னிடம் ஏதாவது காரணங்கள் கூறி வருகின்றனர். எனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வருகிறது. பணத்தை கொடுத்து இந்த விவகாரத்தை மூடி மறைக்க பார்க்கின்றனர் என்றார்.
இதற்கிடையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் தனது தலையை மொட்டை அடித்துக்கொண்டார்.