நமோ டிசர்ட்டுடன் போஸ் கொடுத்து இணையத்தில் சமீபத்தில் ஒரு ஜோடி ட்ரெண்ட் ஆனது. அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த ஜே தாவ் என்ற குஜராத் இளைஞர், நாங்கள் உங்களால் திருமணம் செய்துகொண்டுள்ளோம் என பிரதமர் மோடியை டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார். மேலும் நான் ராகுல்காந்தியின் பேஸ்புக் பக்கத்தில் உங்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டேன். அதற்கு இந்த பெண் லைக் செய்து இருந்தார். ''நாங்கள் பேசினோம். சந்தித்தோம். நாங்கள் இருவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறோம். அதனால் நாங்கள் இணைந்து வாழ முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்து இருந்தார். அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகின.
ஜே தேவின் ட்வீட் பலராலும் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆனது. இது தான் டிஜிட்டல் இந்தியா எனவும், திருமணத்தை இணையம் எளிதாக்கிவிட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே கடந்துள்ள நிலையில், இளைஞர் ஜே தேவ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அந்த பெண்ணான அல்பிகா.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அல்பிகா, நான் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் தற்கொலைக்கு கூட முயன்றேன். எனக்கு வீட்டுக்குள்ளே சுதந்திரம் இல்லை. என்னுடைய விஸ்வாசம் தொடர்ந்து சோதனைக்குட்படுகிறது. எனது செல்போனில் நான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தேவிடம் காட்டி வருகிறேன். எனது சுய விருப்பத்தை அவர் மதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து அல்பிகா தன் பெற்றோரிடம் வசித்து வருவதாகவும், அவரின் ட்விட்டை அழிக்க கோரி தேவின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அல்பிகாவின் ட்விட்டை ஷேர் செய்யும் இணையவாசிகள், ''இப்போது தெரிகிறதா இணைய காதலிலன் அருமை'' என்று பதிவிட்டு வருகின்றனர்