கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே ஒரு லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது நேற்று வரை 5 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 60 சதவிகிதம் அதிகம். நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் 6 கோடியே 8 லட்சம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஒரு கோடியே 25 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜிஎஸ்டி அடிப்படையில் கணக்குகள் கண்காணிக்கப்படுவதால் இந்த ஆண்டு அதிகளவிலான தொழிலதிபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.