அடுக்கடுக்கான விமர்சனங்கள்; ராஜினாமா செய்வாரா ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்? பின்னணி என்ன?

ஒடிசா ரயில் விபத்து காரணமாக அத்துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
ஒடிசா ரயில் விபத்து, அஸ்வினி வைஷ்ணவ்
ஒடிசா ரயில் விபத்து, அஸ்வினி வைஷ்ணவ்ANI

அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய கோரிக்கை

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஒடிசா ரயில் விபத்தில் 275 உயிர்கள் பலியாகியும் 1100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தும் இருக்கும் நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரியலூரில் 1970ஆம் வருடம் நவம்பர் மாதம் ரயில் விபத்தில் 142 நபர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்போதைய ரயில்வே அமைச்சரான லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். அதுபோல், ஒடிசா ரயில் விபத்தில் 275 உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போதைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. விபத்துக்கு ரயில் ஓட்டுநர் தவறு அல்லது சிக்னல் கோளாறு போன்ற காரணங்களை தெரிவித்து, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்யாமல் இருப்பது சரியல்ல என காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரின் கருத்தாக உள்ளது.

அஸ்வினியிடம் ரயில்வேயை ஒப்படைத்தது ஏன்?

அரசியல் செல்வாக்கு இல்லாத அஸ்வினி வைஷ்ணவ் தனது ஐஏஎஸ் அனுபவம் மூலம் சிறந்த நிர்வாகத்தைத் தருவார் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், சரியான நிர்வாகம் இல்லாததே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. ரயில்வே துறையை மட்டும் சிறப்பு கவனத்துடன் நிர்வாகம் செய்ய அனுபவிக்க அமைச்சர் ஒருவரை நியமிக்காமல், தொலைத்தொடர்பு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி ஆகிய துறைகளையும் கவனித்து வரும் அஸ்வினி வைஷ்ணவியிடம் ரயில்வே துறையை ஒப்படைத்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஏற்கனவே நரேந்திர மோடி அரசு ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட்டை ரத்து செய்து அதை பொது நிதிநிலை அறிக்கையுடன் இணைத்தபோது அந்த துறைக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் போக்குவரத்து முதுகெலும்பாக இருந்து வரும் ரயில்வே, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு எட்டும் சேவையாக உள்ள நிலையில், அந்தத் துறைக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களை தவிர, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

வாஜ்பாய்க்கு செயலராளராகப் பணியாற்றிய அஸ்வினி

அஸ்வினி வைஷ்ணவ் யார் மற்றும் அவருடைய பின்புலம் என்ன என்று பார்க்கும்போது வெளிவரும் முக்கிய அம்சம் தற்போது நாட்டையே உலுக்கியுள்ள ரயில் விபத்து நடந்த பகுதியில் அவர் ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியதுதான். ஐஏஎஸ் அதிகாரியாக ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்தபோது கட்டாக் மற்றும் பலசூர் ஆகிய இடங்களில் அஸ்வினி வைஷ்ணவ் ஆட்சியராக பணிபுரிந்தார். பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றினார். காங்கிரஸ் அரசு, மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கு செயலராகவும் வைஷ்ணவ் பணியாற்றினார்.

யார் இந்த அஸ்வினி வைஷ்ணவ்?

அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஜோத்பூரில் தனது படிப்பை முடித்தபிறகு இவர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி, ஒடிசா மாநிலத்தில் நியமனம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்கா சென்று வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பு படித்து எம்பிஏ பட்டம் பெற்றார். பின்னர் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து பல தனியார் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார்.

எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

ஆகவேதான் இவருக்கு நிர்வாக அனுபவம் உள்ளது, எனவும் தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றிய இவர், நிர்வாக ரீதியாக சிறப்பாகச் செயல்படுவார் எனவும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி புல்லட் ரயில் திட்டத்தை ஆட்சிக்கு வந்த உடனேயே அறிவித்த போதிலும், இதுவரை அந்தத் திட்டம் முழுமை அடையவில்லை. நவீன வந்தே பாரத் ரயில்களை இயக்குவது மற்றும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது ஆகிய பணிகள் நடைபெற்று வந்தாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் பயணிகள் பாதுகாப்பு கோட்டை விடப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

மேலும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சமயத்தில் ரயில் சேவைகள் முடங்கிய நிலையில், பின்னர் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது அந்த சமயத்தில் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. அதேபோல முதியோருக்கு அளிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகை உள்ளிட்டவை மீண்டும் வழங்கப்படாததும் நாடாளுமன்றம் வரை கண்டனம் தெரிவிக்கப்பட காரணமாக இருந்தது.

சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம் மற்றும் வேகமாக ரயில்களை இயக்குவது போன்ற அம்சங்களில் காட்டப்படும் அக்கறை பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஏன் காட்டப்படவில்லை என்கிற கேள்வி தற்போது மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறது.

விபத்துகளை தவிர்ப்பதற்கான கேடயம் என பொருள்படும் ’கவச்’ தொழில்நுட்பம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், இப்படிப்பட்ட கோர விபத்து ஒடிசாவில் நிகழ்ந்தது பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

நிதீஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி போன்ற செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்கள் வகுத்துவந்த ரயில்வே அமைச்சர் பொறுப்பை அனுபவம் இல்லாத அஸ்வினி வைஷ்ணவ் வசம் ஒப்படைத்தது சரியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

வெளியுறவுத் துறை அதிகாரிகளான ஜெய்சங்கர் மற்றும் ஹர்தீப் சிங் பூரி, அத்துடன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜ்குமார் சிங் உள்ளிட்டோர் அரசியல் அனுபவம் இல்லாமலே மோடி அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் பிரதமர் அலுவலகத்தில் மையப்படுத்தி, அதிகாரிகளைப்போல அமைச்சர்கள் செயல்படும் விதத்தில் மோடி அரசு நிர்வாகச் சூழலை மாற்றி அமைத்துள்ளது என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

கடந்தகால ரயில் விபத்துகள்!

அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திலே முகாமிட்டு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார் என்றாலும், ஒரு பழுத்த அரசியல்வாதி அவரிடத்தில் இருந்தால் நிர்வாகம் இதைவிட சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து. இந்திய ரயில்வேயை பொறுத்தவரை 1981ஆம் வருடத்தில் பீஹார் மாநிலத்தில் நடந்த விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல 1995ஆம் வருடத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விபத்தில் 350 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. பின்னர் 1999ஆம் வருடத்தில் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழப்பு 265ஐ கடந்தது. இப்படி பல விபத்துக்கள் கடந்த காலங்களில் நடைபெற்று இருந்தாலும், தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறி உள்ள தற்போதைய சூழலிலும் 275 நபர்கள் கோர விபத்தில் பலியாகி உள்ளது அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்த காரணமாக உள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com