
நடைபெறும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பாஜகவிற்கு தென்னிந்தியாவில் வாழ்வா சாவா நிலை தான்.
புதுச்சேரியுடன் சேர்த்து ஆறு தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் தான் பாஜக முதல்வர் ஆட்சியில் இருக்கிறார். ஒருவேளை கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும் பட்சத்தில் கட்சிக்கான தென்னிந்திய கதவுகள் முழுமையாக மூடப்பட்டுவிடும். ஒரு நாட்டை ஆளும் கட்சி உலகின் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி நாட்டின் ஒரு பெரும் நிலப்பரப்பில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவது என்பது உள்ளபடியே கட்சிக்கு கசப்பான கனவாகவே இருக்கும்.
லிங்காயத்து உள்ளிட்ட முக்கிய வாக்கு வங்கியை சேர்ந்த சமுதாயத்தினர் பாஜகவில் இருந்து விலகி வருவது, முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் ஷட்டர் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவது, நந்தினி பால் விவகாரம், இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து என பல விவகாரங்கள் பாஜகவிற்கு தேர்தலில் நெருக்கடியைக் கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இவற்றை சமாளிப்பதற்கான மாற்று யோசனைகளையும் பாஜக முன் வைத்திருக்கிறது.
எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சரி ஒரு வேலை தேர்தலில் தோல்வி அடையும் பட்சத்தில் சில அதிரடி முடிவுகளை எடுக்கவும் இப்போதே திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என டெல்லி பாஜக வட்டாரங்கள் தகவல் சொல்கின்றன.
குறிப்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விவகாரத்தில் அவரது செயல்பாடுகள் மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்களுக்கும் மத்திய பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களுக்கும் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை. இன்னும் குறிப்பாக, அதிமுகவுடனான அண்ணாமலையின் முரண்பாடுகளைக் கட்சியின் பல மூத்த தலைகள் விரும்பவில்லையாம்.
தற்போது திமுக சொத்து பட்டியல் விவகாரம்கூட கட்சித் தலைமையில் இசைவு இல்லை என சொல்லப்படுகிறது. அண்ணாமலையின் திமுகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜகவின் மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் என யாரும் வாய் திறக்காததை ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஓரளவிற்கு உண்மை என்பதும் புலப்படும்.
தமிழகம் வந்த போது பிரதமரது நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது ; டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நடத்திய தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது உள்ளிட்ட பல நிகழ்வுகளையும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
தற்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணாமலையை சுற்றி சர்ச்சைகள் எழத் தொடங்கி அது பாஜகவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அண்ணாமலை மீது கட்சி ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே அவர் மீது புகார் பட்டியலை கொடுத்து வந்த பலரும் அதன் வேகத்தை தற்போது அதிகரிக்க தொடங்கி இருப்பதாகவும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், ஒருவேளை பாஜகவிற்கு பாதகமாக வரும் பட்சத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான இணைப் பொறுப்பாளர் என்ற முறையில் அவர் மீது கட்டாயம் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என டெல்லி பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எனவே கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழ்நாடு பாஜகவிற்கும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.