ராகுல் காந்திக்கு அரசு பங்களா மீண்டும் கிடைக்குமா?
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த முடிவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றதால், அவருக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் அவர் வசித்த வீடு எப்போது மீண்டும் அவருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லியில் எண் 12, துக்ளக் ரோட்டில் இருந்த அரசு பங்களாதான், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ராகுல்காந்தியின் முகவரியாக இருந்தது. ஆனால், சூரத் நீதிமன்ற தீர்ப்பால் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தபோது ராகுல்காந்தி, தான் வசித்த அரசு பங்களாவில் வசிக்கும் உரிமையையும் இழந்தார்.
அடுத்த சில மாதங்கள், டெல்லியில் உள்ள தனது தாய் சோனியா காந்தி இல்லத்தில் தங்கி இருந்த ராகுல்காந்தி, தற்போது நிஜாமுதீன் பகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வசித்த வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்திருந்தார். இந்நிலையில்தான், உச்சநீதிமன்ற உத்தரவால், ராகுல்காந்திக்கு அவரது மக்களவை உறுப்பினர் பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதன் மூலம் காலி செய்த அவரது வீடு எப்போது மீண்டும் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் உள்ள அரசு பங்களாக்கள் மற்றும் வீடுகள் ஒதுக்குவதை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதற்கென்று தனியாக உள்ள குழுதான் முடிவு செய்யும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரது பதவி காலம் உள்ளிட்ட பல்வேறு தகுதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படும். எனவே ராகுல் காந்திக்கு இனி மக்களவை உறுப்பினர்களுக்கான வீட்டுவசதி குழு கூடி முடிவெடுப்பார்கள்.