’வாஜ்பாய் காலத்தில் கூட பிரதமர் படம் இல்லை' - நிர்மலா சீதாராமனுக்கு கேசிஆர்-ன் மகள் பதிலடி

’வாஜ்பாய் காலத்தில் கூட பிரதமர் படம் இல்லை' - நிர்மலா சீதாராமனுக்கு கேசிஆர்-ன் மகள் பதிலடி
’வாஜ்பாய் காலத்தில் கூட பிரதமர் படம் இல்லை' - நிர்மலா சீதாராமனுக்கு கேசிஆர்-ன் மகள் பதிலடி

ரேஷன் கடைகளில் இதற்கு முன்பு பிரதமர் படத்தை வைக்கும் நடைமுறை இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்துகொண்ட விவகாரம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பீர்கூரில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்யச் சென்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலும் உடன் சென்றார். அப்போது நிர்மலா சீதாராமன் அந்த ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஏன் வைக்கப்படவில்லை? என்று ஆவேசமாக கேட்டார். மேலும் அவர், மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும் என்றும் பேனர் இல்லையென்றால் நான் மீண்டும் இந்த இடத்துக்கு வருவேன் என்றும் எச்சரிக்கை கொடுத்துவிட்டு சென்றார்.

ரேஷன் கடைகளில் இதற்கு முன்பு பிரதமர் படத்தை வைக்கும் நடைமுறை இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்துகொண்ட விவகாரம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சுக்கு தெலங்கானவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்வினை ஆற்றிவருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா கூறுகையில், ''நீங்கள் (நிர்மலா சீதாராமன்) பிரதமரின் படங்களை வைக்க விரும்பினால், நாங்கள் அதை நிச்சயமாக செய்வோம். கேஸ் சிலிண்டர்கள், யூரியா உரப் பாக்கெட்டுகள், பெட்ரோல், டீசல், எண்ணெய் மற்றும் பருப்பு பாக்கெட்டுகளில் வைப்போம். விலையுயர்வு செய்யப்பட்ட பொருட்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைப்போம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகையை வரவேற்கிறோம். அவரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் மத்திய நிதி அமைச்சர் ஒரு ரேஷன் கடைக்குச் சென்று பிரதமரின் படம் எங்கே என்று  கலெக்டரிடம் வாதிடுகிறார். நேரு காலத்திலோ, மன்மோகன் சிங்கின் காலத்திலோ அல்லது வாஜ்பாய் காலத்திலோ கூட யாருடைய புகைப்படங்களையும் நாங்கள் வைத்ததில்லை'' என்று அவர் கூறினார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர், தெலங்கானாவில் விநியோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்களின் மீது மோடிஜி ரூ.1105 என்று மோடி சிரிப்பது போன்ற புகைப்படம் ஒட்டப்பட்டது.  இது தொடர்பான வீடியோவை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்ததோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என்று பதிவிட்டார்.

இதையும் படிக்க: மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்னது ஒரு குற்றமா?.. ரன்பீர்-ஆலியா ஜோடிக்கான எதிர்ப்பு ஏன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com