“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியையும், நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்த முயற்சிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் அண்மையில் ராஜினாமா செய்தார். அவருக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையேயான கருத்து மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது. இருப்பினும் தனிப்பட்ட சொந்த காரணத்தினாலேயேதான் ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தெரிவித்தார். ஆனால் வங்கிகளின் கையிருப்புத்தொகையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படேல் ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.
படேலின் ராஜினாமாவைத் தொடர்ந்து மத்திய நிதி ஆணையக்குழுவின் உறுப்பினர் சக்திகாந்த தாஸ் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2015 முதல் 2017 வரை பொருளாதார விவகார செயலாளராக இருந்தவர். இவரது காலத்தில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகப் பணிகளில் முக்கியப் பங்காற்றியவர் இவர். இந்த நிலையில்தான் இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மும்பை செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான பிரச்னை குறித்து பேச விரும்பவில்லை எனத் தெரிவித்தார். நாட்டை நிர்வகிக்கும் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான ஆலோசனை தொடர வேண்டும் எனத் தெரிவித்தார். பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் சந்திக்கும் பிரச்னைகளையும், சவால்களையும் தீர்க்க முதலில் கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
பங்குதாரர்களுடான உறவு சுமூகமாக இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது எனக்கூறினார். அதேசமயம் மத்திய அரசு பங்குதாரர் இல்லை என்றும், இருப்பினும் அவர்கள் தான் நாட்டை நிர்வாகிப்பதாகவும் கூறினர். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியையும், நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்த முயற்சிக்கப்படும் என்றார். அதற்காக பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.