“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி

“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி

“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி
Published on

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே, தன் மீது பாரதிய ஜனதா கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் ஜார்க்கண்டில் காங்கிரஸ் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். மேக் இன் இந்தியா என பிரதமர் கூறி வரும் நிலையில், எங்கு பார்த்தாலும் இப்போது இந்தியாவில் பாலியல் வன்கொடுமைதான் நடப்பதாக ராகுல் தெரிவித்தார். பிரதமரின் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவே உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பெண்ணைக் கொல்ல விபத்தை ஏற்படுத்திய நிலையிலும் பிரதமர் வாய் திறக்கவில்லை என ராகுல் குற்றம்சாட்டினார். இதையடுத்து, ராகுலின் கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை பாரதிய‌ ஜனதா எம்பிக்கள் பலர் அளித்தனர்.

ராகுல் காந்தியின் பேச்சு, ஒட்டுமொத்த நாட்டின் பெண்களை அவமதித்து விட்டதாக பாரதிய ஜனதா எம்பி லாக்கெட் சட்டர்ஜி குற்றம்சாட்டினார். எல்லா ஆண்களும் பாலியல் வன்கொடுமைக்காரர்கள் அல்ல என்ற அவர், அனைத்து ஆண்களையும் ராகுலின் பேச்சு காயப்படுத்தி விட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய திமுக எம்பி கனிமொழி, மேக் இன் இந்தியா என்று கூறும் பிரதமரின் திட்டத்தை மதிப்பதாகவும், ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உணர்த்தவே ராகுல் அப்படி குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்தார். டெல்லியை பாலியல் வன்கொடுமையின் தலைநகரம் என பிரதமர் மோடி பேசிய வீடியோ தனது செல்போனில் இருப்பதாகக் கூறிய அவர், அதை அனைவரும் காண ட்விட்டரில் பகிரப் போவதாகவும் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையில் இருந்து மக்களை திசை திருப்பவே பாரதிய ஜனதா இதை பிரச்னையாக்குவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com