மோடி - பைடன் சந்திப்பின் வழியாக இந்திய - அமெரிக்க நல்லுறவு உறுதிசெய்யப்படுமா?
இந்தியப் பிரதமர் மோடி, நாளை முதல் முறையாக அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னணியில் என்ன மாதிரியான விஷயங்கள் உள்ளன, இந்த சந்திப்புக்குப் பின் இரு நாடுகளும் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கும், என்ன மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பவை குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு, முதல்முறையாக நாளை அமெரிக்கா பயணிக்கிறார் பிரதமர் மோடி. அங்கு ஐக்கிய நாடுகள் மாநாட்டில் அவர் கலந்துக்கொள்கிறார். அந்த மாநாட்டில் அவர் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து விரிவான சில ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் பிரச்சனை இந்த ஆலோசனைகளில் முக்கிய இடம் பிடிக்கும் என சொல்லப்படுகிறது. என்றாலும், இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்தும் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
தொடர்புடைய செய்தி: 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!
டோனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி நெருக்கமாக பழகினார் என்பது அனைவரும் அறிந்ததே. சொல்லப்போனால் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் டோனல்ட் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களைக் கூட்டி கிட்டத்தட்ட மோடியே நேரடியாக டிரம்புக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வது போன்ற பிம்பங்கள்கூட எழுந்தது. இத்தகைய பின்னணியில் பார்க்கும்போது, டிரம்பை தோற்கடித்து அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுடனும், மோடி நட்புறவை பாராட்டுவாரா, இந்திய - அமெரிக்க நட்புறவு கூட்டணி தொடருமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை ஒருபக்கம் பயங்கரவாத அச்சுறுத்தல் என்றால், இன்னொரு பக்கம் சீனாவின் அச்சுறுத்தல் என்று அமெரிக்காவே தற்போதைக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்கன் தலிபான் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, மீண்டும் தீவிரவாதம் அமெரிக்காவை குறிவைக்கும் என எந்த அளவுக்கு அஞ்சப்படுகிறதோ, அதே அளவுக்கு சீனாவின் அச்சுறுத்தல் குறித்தும் அமெரிக்கா கவலையுடன் உள்ளது. சீனா குறித்து அமெரிக்காவுக்கு என்ன அச்சமென நாம் நினைக்கலாம். உண்மையில் தொழில் ரீதியாகவும் மற்றும் ராணுவ ரீதியாகவும் தொடர்ந்து அமெரிக்காவுக்கு போட்டியாளராக வளர்ந்து வரும் சீனா, இனி தானே உலகின் வல்லரசு நாடு என அமெரிக்காவை ஓரம்கட்ட விரும்புகிறது என வல்லுனர்கள் அமெரிக்க அரசுக்கு தெளிவாக தெரிவித்துள்ளனர். ஆகவேதான் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க, பல கோணங்களில் யோசித்து வரும் அமெரிக்க அரசு, அதன் தொடர்ச்சியாக இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. பிரிட்டனையும் இந்த கூட்டணியில் சேர்த்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அளிக்க அமெரிக்கா முன்னேற்றத்திற்கும் முயற்சியே இதற்கு உதாரணம்.
சீனாவுக்கு 'செக் வைக்க’ நடைபெறும் இந்த முயற்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஏனெனில் லடாக் எல்லை தொடங்கி அருணாச்சல பிரதேச எல்லை வரை பல்வேறு எல்லைப் பகுதிகளில் இந்தியா, சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதேபோலவே நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும் இந்தியா போராடி வருகிறது. பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் கைப்பாவையாக செயல்படுவதும் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை பாகிஸ்தான் மூலம் கட்டுப்படுத்த சீனா முயன்று வருவதும் அனைவரும் நன்கு அறிந்ததே. இவற்றை அடிப்படையாக வைத்து, ‘சீனாவுக்கு எதிரான முயற்சிகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது’ என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது. இதனால்தான் பாதுகாப்பு ரீதியான நவீன தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு அளிக்கவும், வியாபார ரீதியாக முதலீடுகளை அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரிக்கவும் தேவையான முயற்சிகளை அமெரிக்க அரசு செய்து வருகிறது. முந்தைய டிரம்ப் அரசை போலவே, ஜோ பைடன் அரசு இதே கொள்கைகளை கடைபிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இதைத்தவிர, டிரம்ப் ஆரம்பம் முதலே மோடியுடன் நட்பாக இருந்தாலும், வணிகம் தொடர்பான கொள்கைகள் மற்றும் விசா விதிகள் ஆகியவற்றில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கையாண்டார். பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு டிரம்ப் அமல்படுத்திய விசா விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. அதேபோலவே வணிகம் தொடர்பான சர்ச்சைகளும் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. பைடன் ஆட்சியில் இந்தியாவுடன் உறவை அமெரிக்கா சிறப்பாக வைத்திருக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணமும் வல்லுனர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அது, கோவிட் தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் அமெரிக்காவிலிருந்து மூலப்பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய பைடன் அரசு முக்கிய உந்துசக்தியாக இருந்தது. முன்பு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, இந்தியாவை மிரட்டும் வகையிலே டிரம்ப் உடனடியாக இந்த மருந்துபொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வலியுறுத்தியதையும் வல்லுனர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தொடர்ந்து அமெரிக்கா பல்வேறு முக்கிய விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோலவே சீனா எல்லை பிரச்சினைகளிலும், திரைமறைவில் அமெரிக்க ஆதரவு தொடர்ந்து இந்தியாவுக்கு கிட்டி வருகிறது. ஆளில்லா ட்ரோன் விமானங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் அமெரிக்க உதவியுடன் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது ஒரு உதாரணம் எனக் கருதப்படுகிறது.
இவை மட்டுமன்றி, இந்தியா பாதுகாப்பு ரீதியான பல ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அம்சங்களையும் அமெரிக்காவுடனான உறவை நீட்டிப்பதில் கருத்தில் கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். லடாக் எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்தபோது, அமெரிக்க அரசு இந்தியப் படைகளுக்கு தேவையான கருவிகள் மற்றும் ஆயுதங்களை விரைந்து அளிக்க அமெரிக்க நிறுவனங்களை வலியுறுத்தியது. அதேபோலவே, இஸ்ரேல் அரசு அமெரிக்காவின் அங்கீகாரத்துடன் இந்தியாவுக்கு முக்கிய தொழில்நுட்பங்களை அளித்து வருகிறது. இவற்றையெல்லாம் வைத்து, பைடன் அரசு நிச்சயம் நட்புறவை எதிர்நோக்கும் என கணிக்கப்படுகிறது.
ஆகவே பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை சந்திக்கும்போது, தனிப்பட்ட முறையில் மோடியும் பைடனும் மிகவும் நெருக்கமாக பழகாவிட்டாலும், இந்தியா-அமெரிக்கா உறவு தொடர்ந்து வலுப்பெறும் என கருதப்படுகிறது.
- கணபதி சுப்பிரமணியம்.