"ஆக்சிஜன் சப்ளையை தடுக்கும் எவரையும் தூக்கிலிடுவோம்!" - டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்

"ஆக்சிஜன் சப்ளையை தடுக்கும் எவரையும் தூக்கிலிடுவோம்!" - டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
"ஆக்சிஜன் சப்ளையை தடுக்கும் எவரையும் தூக்கிலிடுவோம்!" - டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்

"ஆக்சிஜன் சப்ளையை தடுப்பவர்கள் யார் என்று கூறுங்கள்... அவர்களை நாங்கள் தூக்கிலிடுகிறோம்" என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கூறியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கில் டெல்லி அரசு - மத்திய அரசு தரப்புக்கு இடையே நடந்த விவாதத்துடன், டெல்லி உயர் நீதிமன்றம் வேறு என்னவெல்லாம் சொன்னது? - இதோ முழு விவரம்...

டெல்லியில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு உரிய ஆக்சிஜன் சப்ளையை பெற்றுத் தருமாறு மருத்துவமனைகள் சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று காலையில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்றது.

முதலில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், "டெல்லி அரசாங்கம் உரிய ஆக்சிஜன் டாங்கிகளை ஏற்பாடு செய்யாததன் காரணமாக, கையில் இருக்கக்கூடிய ஆக்சிஜன்களை கூட உரிய நேரத்தில் சப்ளை செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்" என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அப்போது கோபமான நீதிபதிகள், "டெல்லி அரசாங்கத்திற்கு எல்லாம் வீடு தேடி வர வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை மத்திய அரசுடன் இணைந்து தீர்த்துக் கொள்ளுங்கள்; மொத்த பாரத்தையும் மத்திய அரசின் மீது எங்களால் வைக்க முடியாது. குடிமக்கள் இப்படி ஆக்சிஜன் இல்லாமல் இறந்து கொண்டிருப்பதை பார்க்க முடியாது. ஒருங்கிணைப்புடன் செயல்படுங்கள்" என கோபமாகக் கூறினர்.

அப்போது பேசிய மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞர், "டெல்லி அரசாங்கம் தங்களது ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை அவர்களாகவே ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் கூறினார். அதற்கு பதிலளித்த டெல்லி அரசாங்க வழக்கறிஞர், "டெல்லி ஒரு தொழிற்சாலை நகரம் கிடையாது. எனவே எங்களுக்கு இன்று ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கிடையாது" எனக் கூறினார். "எங்களிடம் இரண்டு லாரிகள் இருந்தால் நாங்கள் இப்படி கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டோம். நாங்களாகவே நேரடியாக களத்தில் இறங்கி விடுவோம்" என்று அவர் கூறினார்.

அப்போது மீண்டும் கோபமான நீதிபதிகள், "உங்கள் மக்களை காப்பாற்ற நீங்கள்தான் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நேரடியாக உங்கள் அதிகாரிகளை மத்திய அரசு அதிகாரிகளுடன் இணைத்து பேசச் சொல்லி முடிவுக்கு வாருங்கள். டெல்லி மாநில முதல்வர்கூட முன்னாள் அரசு அதிகாரிதான். எனவே இந்த நேரத்தில் அதிகாரி போல் செயல்படுங்கள்" எனக் கூறினர்.

தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளின் வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்தபோது தங்களது மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பெரும் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், டெல்லி அரசாங்கத்தாலும் எந்தவிதமான அடிப்படை உதவிகூட செய்யமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறினர். மேலும், அதிகாரிகள் யாரையும் இது தொடர்பாக உடனடியாக தொடர்புகொள்ள முடியாத சூழல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து வருவதால், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளையும் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்து வருவதாக வழக்கறிஞர்கள் கூறினர்.

அப்போது டெல்லி அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒருநாளைக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தருகிறோம் என்ற தங்களது உறுதியினை மத்திய அரசாங்கம் இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறது. ஒரு நாளைக்கு 100 மெட்ரிக் டன் அளவாவது மத்திய அரசு தொகுப்பிலிருந்து குறைபாடாக உள்ளது. நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. இதன் காரணமாகத்தான் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.

டெல்லி அரசாங்கம் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவ இருக்கிறது. கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து இருக்கிறோம். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறோம். எனினும் மத்திய அரசு தொகுப்பில் இருந்து முழுமையாக ஆக்சிஜன் சப்ளை கிடைக்கவில்லை என்றால், டெல்லியின் நிலைமை முழுமையாக சீரழிந்துவிடும்" என்று அவர் கவலை தெரிவித்தார்.

மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிடும்போது, "அடுத்த சில வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமானதாக இருக்கும். இதனை மக்களை கட்டுப்படுத்துவதற்காக சொல்லவில்லை. நிதர்சனமான உண்மை இதுதான். அனைவரும் தயாராக இருக்கவேண்டும். தற்போது வரை ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து வருகிறோம்" என்று கூறினார். அப்போது டெல்லி மற்றும் மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞர்கள் இடையே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் ஏற்பட்டது.

இதற்கு கடுமை காட்டிய நீதிபதிகள், "மனிதாபிமான அடிப்படையில் மிக முக்கியமான வழக்கை நாங்கள் விசாரித்து வருகிறோம். ஒருவரை ஒருவர் குறை கூறுவதை நிறுத்தி, மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்" என அறிவுரை வழங்கினர்.

மேலும், "ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை இல்லாமல், எந்த இடைஞ்சலும் இல்லாமல் சென்று சேருவதை அரசுகள் உறுதிப்படுத்துங்கள். யாராவது ஆக்சிஜன் சப்ளையை தடுக்கிறார்கள் என்றால் எங்களிடம் சொல்லுங்கள், நாங்கள் அவர்களை தூக்கிலிடுகிறோம். இதுபோன்ற விஷயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என நீதிபதிகள் சற்று காட்டமாகவே கூறினர்.

தொடர்ந்து நீதிபதிகள், ரயில்வே துறை மற்றும் விமானத் துறை ஆகியவற்றின் மூலமாக ஆக்சிஜன் சப்ளை முழுமையாக எடுத்துச் செல்வது தொடர்பான உறுதிப்பாட்டை மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பிறகு, வழக்கு விசாரணை தொடரும் என கூறி ஒத்திவைத்தனர்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com