“என் கிராமத்தில் வசிக்கும் 2 ஆயிரம் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்”- சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது சொந்த கிராமத்தில் வாழும் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனினும் சொந்த கிராமமான சிந்தமடகாவில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வாய்மொழியாக இதனை தெரிவித்துள்ளார். சாதி மற்றும் மத பேதங்கள் இல்லாமல், கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என உறுதியளித்துள்ளார்.
10 லட்சம் ரூபாய் மூலம் கோழிப் பண்ணை, பால் பண்ணை அமைத்துக் கொள்ள முடியும் என்றும், மேலும் வேளாண் தொழில் விருத்திக்காக டிராக்டர் வாங்குவது, அறுவடை இயந்திரங்களை கொள்முதல் செய்வது, சிறு தொழில் தொடங்குவது, ஆட்டோ வாங்குவது என முன்னேற்றத்திற்கான செலவுகளை கிராமத்தினர் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகயிருக்கின்றன.
இதற்கிடையே மாநிலத்தின் முதல்வராக செயல்படாமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் போல சந்திரசேகர ராவ் செயல்படுகிறார் என பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.