'நடிகர் முனாவரை தாக்குவோம்; அரங்கிற்கு தீ வைப்போம்' - பாஜக எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்

'நடிகர் முனாவரை தாக்குவோம்; அரங்கிற்கு தீ வைப்போம்' - பாஜக எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்
'நடிகர் முனாவரை தாக்குவோம்; அரங்கிற்கு தீ வைப்போம்' - பாஜக எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்

நடிகர் முனாவர் ஃபாரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

ஸ்டாண்ட் அப் காமெடியனான நடிகர் முனாவர் ஃபாரூக்கி, கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களையும், மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் முனாவர் ஃபாரூக்கி, நிகழ்ச்சி நடத்தும் போதெல்லாம் பாஜகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் முனாவர் ஃபாரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், முனாவர் ஃபாரூக்கி தனது நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர், ''முனாவர் ஃபாரூக்கியின் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும், நாங்கள் அவரை அடிப்போம். அந்த இடத்திற்கு தீ வைப்போம். முனாவர் ஃபாரூக்கி தெலுங்கானாவுக்கு வந்தால் தகுந்த பாடம் கற்பிப்போம்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் முனாவர் ஃபாரூக்கிக்கு மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.ராஜா சிங், ``பாரதம் விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறும். ராமர் பெயரை உச்சரிக்காதவர்கள் பாரதத்தை விட்டு ஓட வேண்டும்" என்று பொதுவெளியில் பேசியிருந்தார். டி.ராஜாசிங்கின் இத்தகைய பேச்சு சர்ச்சையானதையடுத்து, பொதுவெளியில் சமூக அமைதியைச் சீர்குலைத்ததாக, அவர்மீது ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் டி.ராஜா சிங்குக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'உலகில் போர்களை தடுக்க மோடி தலைமையில் குழு அமைக்கலாம்' – மெக்சிகோ அதிபர் யோசனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com