சித்த மருத்துவம் கொரோனாவை குணப்படுத்துமா? : மருத்துவர் கு.சிவராமனுடன் சிறப்பு பேட்டி

சித்த மருத்துவம் கொரோனாவை குணப்படுத்துமா? : மருத்துவர் கு.சிவராமனுடன் சிறப்பு பேட்டி
சித்த மருத்துவம்  கொரோனாவை குணப்படுத்துமா? : மருத்துவர் கு.சிவராமனுடன் சிறப்பு பேட்டி

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 125 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள, அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், கைகளை மூக்கு, வாய் போன்றவற்றிற்கு அருகே கொண்டு செல்லாமல் இருத்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். நவீன மருத்துவம் மக்களுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நமது பாரம்பரியமான சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம் கொரோனாவை எப்படி அணுகுகிறது என்பதை தெரிந்து கொள்ள நாம் புதியதலைமுறை இணையதளம் சார்பில் சித்த மருத்துவரும், எழுத்தாளருமான மருத்துவர் கு.சிவராமனை தொடர்பு கொண்டு பேசினோம். அவரிடம் கொரோனா குறித்த நம் சந்தேகங்களை முன் வைத்தோம். அவர் கூறியதாவது.

கொரோனாவை சித்த மருத்துவம் எப்படி அணுகுகிறது ?

நவீன மருத்துவத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை எந்தவித மருந்துகளும் பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நிலைமைதான் சித்த மருத்துவத்திலும் நீடிக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால் கொரோனா குறித்து நாம் ஆய்வு செய்வதற்கு கூட நம்மிடம் போதிய வசதிகள் இல்லை. ஆகவே, நவீன அறிவியல் சொல்லக்கூடிய மருத்துவ வழிமுறைகளை நாம் தற்போது கடைப்பிடிப்பதே சாலச்சிறந்தது.

நமது பாரம்பரியமான உணவு வழிமுறைகள் கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள உதவுமா?

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது உணவு பாரம்பரியம் முற்றிலும் வித்தியாசமானது. நாம் உணவில் பயன்படுத்தும் இலவங்கம், இஞ்சி, பூண்டு,பட்டை உள்ளிட்ட உணவு பொருட்கள் இயல்பாகவே நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் தன்மை கொண்டவை. குறிப்பாக கசப்பு, துவர்ப்பு சுவை கொண்ட உணவுபொருட்களை எடுத்து கொள்வது சிறந்தது. ஏனெனில் இந்தச் சுவைகள் நமது ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் கொரோனாவை பொருத்தவரை இந்த உணவுகள் சாப்பிட்டால் அது குணமாகிவிடும் எனச் சொல்லமுடியாது. ஆகவே இதையும் ஒரு அனுமானமாகவே கூற முடியும்.

இந்தியாவில் இனி வெயில் காலம், ஆகவே வரும் காலத்தில் கொரோனா எப்படி இருக்கும் ?

உலக சுகாதார நிறுவனம் வெப்ப நாடுகளுக்கு கொரோனா எளிதில் பரவும் என்று கூறுகிறது. ஆனால் நிலைமையை பார்க்கும்போது வெப்பநிலை குறைவான நாடுகளில் கொரோனா வேகமாக பரவுவதை பார்க்க முடிகிறது. சீனா, இத்தாலியில் வெப்பநிலை 15 டிகிரிக்கும் கீழாக உள்ளது. இந்தியாவை பொருத்தவரை இனி வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதனால் திறந்த வெளிகளில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா எளிதில் பரவாது. ஆனால் அலுவலகங்களை பொருத்தவரை, அங்கு குளிர்சாதன பெட்டிகள் இருக்கும். அதனால் அங்கு பணிபுரிபவர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அது எளிதில் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

உடற்பயிற்சி கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுமா?

உடற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டாலும், வீட்டில் நம்மால் முடிந்த உடற்பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் போன்றவற்றை செய்வது அவசியமாகிறது. ஏனெனில் அது நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துகிறது. ஆனால் இது கொரோனாவிற்கு தீர்வாகாது. என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com