ராணுவத்தில் பணியாற்றவுள்ளார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜரின் மனைவி !

ராணுவத்தில் பணியாற்றவுள்ளார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜரின் மனைவி !

ராணுவத்தில் பணியாற்றவுள்ளார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜரின் மனைவி !
Published on

கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில் மேஜர் விபூதி தோவுண்டியலும் ஒருவர். கணவரின் இறப்பு செய்தி கேட்ட மனைவி கெளல் (26) தனது கணவரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த வீடியோ வடிவில் பதிவு செய்திருந்தார்.

அதில் “ அடிக்கடி நீ என்னிடம் சொல்வாய், என்னை காதலிக்கிறாய் என்று ...ஆனால் உண்மை என்னவென்றால் நீ என்னை விட நாட்டையே அதிகமாக காதலித்திருக்கிறாய். என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை உன்னை நான் காதலித்துக் கொண்டு இருப்பேன். உனக்காக வாழ கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கண்ணீருடன் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அப்போது வெளியாகி வைரலானது. இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து நொய்டாவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கெளல் தனது மாமியாரின் வழிகாட்டுதலின்படி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பியுள்ளார். இதற்காக ராணுவத்தில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் பங்கேற்றுள்ளார். கணவர் ராணுவத்தில் பணியாற்றியதால் அவருக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

இது குறித்து கெளல் மாமியார் கூறும் போது “ கெளல் ஒரு தைரியமான பெண். அவளை எனது மகளைப் போலவே பார்த்து வந்தேன். எங்கள் வாழ்கையில் அவள் இடம் பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் . ராணுவத்தில் இருந்து வந்த அழைப்பு செய்தி அவளுக்குதான் முதலில் தெரிய வந்தது. ஆனால் அந்தச் செய்தியை அவளின் பெற்றோர்களிடம் பகிர்வது போல் என்னிடம் முதலில் பகிர்ந்தாள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி விபூதி தோவுண்டியலுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கெளல் பேசும் போது “ நானும் அவரும் கல்லூரியில் படிக்கும் போது முதலில் அறிமுகமானோம். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தார். எனது கணவர் நாட்டை மிகவும் நேசித்ததை என்னால் மறக்க முடியவில்லை. எனது கணவர் ராணுவத்தில் எந்த வழியில் பணியாற்றினாரோ அதே வழியில் நானும் செல்ல விரும்புகிறேன். நான் ராணுவத்தில் சேர்வதற்கு தூண்டுதலாக இருந்தவர் எனது மாமியார். எப்போதும் அவரை நான் ஹீரோவாக பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com