''நீதிக்கான போராட்டம்'' - கேரள முதல்வரிடம் ஆதரவு கோரிய சஞ்சீவ் பட்டின் மனைவி!
சஞ்சிவ் விடுதலை தொடர்பாக அவரது மனைவி ஸ்வேதா பட் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனை சந்தித்து ஆதரவு கோரினார்
குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் 1990ஆம் ஆண்டு ஜாம்நகரின் கூடுதல் எஸ்பியாக பணியிலிருந்தார். அப்போது பாஜக தலைவர் அத்வானியின் கைதிற்கு எதிராக ரத யாத்திரை சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பிரபுதாஸ் வைஷ்னானி ஒருவர் ஆவார்.
காவல்துறையின் விசாரணையிலிருந்து பிரபுதாஸ் விடுவிக்கப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். காவல்துறையினர் பிரபுதாஸ் வைஷ்னானியை எந்தவித கொடுமையும் படுத்தவில்லை எனத் தெரிவித்தனர். எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சீவ் பட் மற்றும் பிரவின்சின் ஜாலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குஜராத்தின் ஜாம்நகர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 20ம் தேதி வழங்கப்பட்டது. அதில் சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு காவல்துறையினருக்கு தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் சஞ்சிவ் விடுதலை தொடர்பாக அவரது மனைவி ஸ்வேதா பட் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனை சந்தித்து ஆதரவு கோரினார். ‘fight for justice’ என்ற கோரிக்கையின் கீழ் பலரையும் சந்தித்து ஸ்வேதா பட் ஆதரவு கோரி வருகிறார். இது குறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர்,
ஸ்வேதா பட் என்னை அலுவலகத்தில் சந்தித்தார். சஞ்சீவ் பட்டின் விடுதலைக்கான அவரது போராட்டத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவை வழங்கியுள்ளோம். அவரது நோக்கத்தை ஆதரிக்கும் முதலமைச்சர்களையும் அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைப்பதில் நாங்கள் முன்னிலை வகிப்போம் என தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் பட் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி ''கலவரத்தில் இந்துக்கள் மீது சற்று குறைந்த நடவடிக்கை எடுங்கள்’’ என சொன்னதாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சஞ்சீவ் பட்டின் மனைவி 2012ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் மோடிக்கு எதிராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.