பெங்களூரு அதுல் சுபாஷ் வழக்கு: மனைவி மற்றும் அவரின் குடும்பத்தார் கைது!
ஏஐ தொழில்நுட்ப பொறியாளர் அதுல் சுபாஷ், கடந்த 9ம் தேதி பெங்களூருவில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது மரணத்திற்கான காரணங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டு கடிதத்தில் எழுதியிருந்தது மிகவும் பேசுபொருளானது.
அதன்படி அக்கடிதத்தில், “எனது மனைவி, அவரது குடும்பம் மற்றும் எங்களின் விவாகரத்து வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் - ஆகியவையே எனது தற்கொலைக்குக் காரணம்” எனக்கூறி 40 பக்கங்களுக்கு எழுதியிருந்தார். மேலும் இவை அனைத்தையும் வீடியோவாகவும் பதிவு செய்து தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் அவர்.
40 பக்க கடிதமும் 1 மணி நேர வீடியோவும்... என்ன இருந்தது அதில்?
அதுல் சுபாஷ் தான் எழுதிய 40 பக்கக் கடிதத்தில், 24 பக்கங்களில் மனைவி மற்றும் அவர் குடும்பத்துக்கு எதிராக பல விஷயங்களை எழுதியுள்ளார். மற்ற பக்கங்களில் தன் மகனுக்கு உருக்கமாக பல விஷயங்களை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதிலும் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன், “வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள். இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டார். இதையடுத்து இவ்விவகாரம், இந்தியா முழுக்க பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.
குறிப்பாக, ‘ஆண்களுக்கான நீதி இந்தியாவில் மறுக்கப்படுகிறது, பொருளாதார ரீதியாக ஆண்கள் சுரண்டப்படுகிறார்கள். இந்தியாவில் ஆண்களுக்கான சட்டம் இல்லை’ என்பன போன்ற விவாதங்கள் எழுந்தன.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
மூவர் கைது!
இதையடுத்து அதுல் சுபாஷின் சகோதரர், அதுலின் மனைவி மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்து கோத்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தங்கள் மீது எந்த தவரும் இல்லை எனக் கூறிய சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவர் குடும்பத்தினர், கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் நிகிதா சிங்கானியாவை ஹரியானா மாநிலம் குருக்ராமில் வைத்து பெங்களூரு காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
நிகிதாவின் தாயும் சகோதரரும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை பெங்களூரு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மூவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அதுல் மனைவியுடைய மாமா சுஷில் சிங்கானியா மட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.