'அரசியலும் காரணம்...' - மேகதாது சிக்கலில் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம் எழுதியது ஏன்?

'அரசியலும் காரணம்...' - மேகதாது சிக்கலில் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம் எழுதியது ஏன்?
'அரசியலும் காரணம்...' - மேகதாது சிக்கலில் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம் எழுதியது ஏன்?

காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: 'மேகதாது அணை பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் தேவையை பூர்த்தி செய்ய கட்டப்பட வேண்டும். இந்த அணைத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. இரு மாநிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது இந்தத் திட்டம். மேகதாது அணை காரணமாக தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

ஆகவே, தமிழக அரசு மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க கூடாது என எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார். இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு நிலவுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். இந்த அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, இரு மாநிலத்தின் நன்மை மற்றும் விவசாயிகளின் நன்மைக்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழக அரசு குந்தா மற்றும் சிலஹல்லா நீர் மின் நிலைய திட்டங்களை பவானி பகுதியிலே அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் கர்நாடக அரசின் அனுமதியை கோரவில்லை. இதுவரை தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவர்த்தையும் நடத்தவில்லை. அதேபோன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேட்டூர் அணைக்கு கீழ் தமிழக சிறு சிறு நீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இதற்கும் இதுவரை கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

எனவே, இரு மாநில நலனுக்காக கட்டப்பட்டும் மேகதாது அணைக்கும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம். என்ன பிரச்னையாக இருந்தாலும் இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். அதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று எடியூரப்பா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

மேகதாது அணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்து சட்டபூர்வமாக இந்த அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அத்துடன், மத்திய அரசு இந்த அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணைத் திட்டத்திற்கு சிக்கல்கள் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போகக்கூடிய சூழ்நிலை உருவாகும் என கர்நாடக அரசு கருதுவதால், அந்த மாநில முதல்வர் எடியூரப்பா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் அதிகாரிகள் கணித்துள்ளனர். அரசியல் ரீதியாகவும் மேகதாது திட்டம் கடுமையான எதிர்ப்பை சந்திக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.



மத்தியிலும் அதேசமயத்தில் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருப்பதால் ஒருவேளை மத்திய அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளித்தால், அது தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கருத்தை உருவாக்கும். அதேசமயத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்றுவிட்டால் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு வலுக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

அண்மையில் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என கடிதத்தில் தெரிவித்துள்ள எடியூரப்பா, இரு மாநில உறவுகளை வலுப்படுத்த இணைந்து செயல்பட தயார் எனவும் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தொடர்ந்து கர்நாடக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு நடந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு எவ்வளவு நீர் பங்கீடு செய்ய வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com