5 லட்சம் இலவச விசா வழங்க மத்திய அரசு திட்டம் - மீளும் நம்பிக்கையில் சுற்றுலா துறையினர்
சுற்றுலா துறையை ஊக்குவிக்க 5 லட்சம் விசாக்களை இலவசமாக வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கொரோனா பேரிடருக்கு முன்பாக ஆண்டுக்கு 1.1 கோடி வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவார்கள். இவர்கள் செய்யும் செலவு 3,000 கோடி டாலர்கள் ஆகும். இந்தியாவுக்கு வருபவர்கள் சராசரியாக 21 நாட்கள் இந்தியாவில் தங்குகிறார்கள். தினமும் 34 டாலர்கள் அளவுக்கு அவர்கள் செலவு செய்கிறார்கள்.
ஆனால், கொரோனா பேரிடருக்குப் பிறகு சுற்றுலா முற்றிலும் முடங்கிவிட்டது. அதனால்தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை இருக்கும். அல்லது, முதல் 5 லட்சம் இலவச விசா வழங்கும் வரையிலும் இருக்கும்.
ஒரு சுற்றுலா பயணிக்கு ஒருமுறை மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும். அரசின் இந்த திட்டம் மூலம் ரூ.100 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
சுற்றுலா துறையினருக்கு கடன்:
சுற்றுலா ஏஜெண்ட் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் நாடு முழுவதும் 11000-க்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கான கடன் உதவி திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது. சுற்றுலா ஏஜெண்டுகளுக்கு 10 லட்ச ரூபாயும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு 1 லட்ச ரூபாய் வரையும் எந்த பிணையும் இல்லாமல் கடன் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், எந்த விதமான பரிசீலனை கட்டணமும் கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது.
சுற்றுலா துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5.5 கோடி பேர் பணிபுரிகிறார்கள். கொரோனா காரணமாக 3.8 கோடி நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 5 லட்சம் இலவச விசாக்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், வரவேற்கத்தக்க முடிவு என்பதே சுற்றுலா துறையினரின் கருத்தாக இருக்கிறது.