ரயில்வேத் துறை தனியார் மயமாக்கல் ஏன் ? - சோனியா காந்தி கேள்வி
மேக் இன் இந்தியா திட்டத்தைத் தொடங்கிய மத்திய அரசு ரயில்வே துறையை ஏன் தனியார் மயமாக்குகிறது என சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில் பேசிய சோனியா காந்தி, நாட்டின் மிக பழமையான ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை தனது ரேபரேலி தொகுதியில் இருப்பதாக கூறினார். திறமையான தொழிலாளர்கள் இருந்தும் தனியார் மயமாக்கும் முயற்சியால் அங்குள்ள ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய துறையாக கருதப்படும் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதன் அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். தனியாக பட்ஜெட் தொடங்கிய மத்திய அரசு ரயில்வேத் துறைக்கு மூடுவிழா காண திட்டமிட்டிருப்பதாக சோனியா சாடினார். இதனால் அரசின் மீதான நம்பிக்கையை இழக்கும் முடிவுக்கு மக்கள் வந்துள்ளதாக தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.