கலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..!

கலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..!
கலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நேற்றும் போராட்டம் வெடித்தது. அதேசமயம் மக்களவையில் இந்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நேற்று போராட்டம் வெடித்தது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் திரண்ட மக்கள் கோசங்களை எழுப்பினர். அத்துடன் நடு ரோட்டில் டயர்களை தீவைத்தும் கொளுத்தினர். சில இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. டயர் எரிப்பு, தீவைப்பு சம்பவங்களால் வடகிழக்கு மாநிலங்கள் பதட்டமாகின. போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. வன்முறை சம்பவங்களில் 8 பேர் மேல் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்தும் இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மசோதா சொல்வது என்ன..?

வங்‌கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறிய‌ ‌இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு கு‌டியுரிமை வழங்க இந்த மசோதா வழி செய்கிறது. 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ‌ஆகிய நாடுக‌ளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் ஆகியோர் குடியுரிமை பெற இம்மசோதா‌ வழிவகுக்கும்.

எதிர்ப்பு கிளம்புவது ஏன்..?

1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற 1985-அஸ்ஸாம் ஒப்பந்தத்தை செயலற்றதாகும் வகையில் இந்த மசோதா இருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று குடியுரிமை விவகாரத்தை மாநிலம், மதம், இனம், ஜாதி ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சட்டவிரோதமாக பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க அஸ்ஸாம் மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்த அனைத்து மக்களுக்குமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் இந்து, முஸ்லிம் என்றில்லாமல் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த அனைவரையும் நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் ஒருகட்டத்தில் மாநிலத்தில் அதிகரிக்கும்போது, தங்கள் மாநிலத்தில் நீண்ட காலமாகவே பின்பற்றப்பட்டு வரும் பராம்பரியம் மறைந்துபோய்விடும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

இதேபோன்று மிசோரம் மாநில மக்களும் இந்த மசோதாவிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த மசேதாவால் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியெர்ந்த பௌத்தர்களுக்கு அதிக அளவில் சலுகை கிடைக்கும் என மிசோரம் மாநில மக்கள் நினைக்கின்றனர்.

முன்னதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மேகாலயாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com