வேகமாக உருகும் இமயமலை! இந்தியாவுக்கு வரும் பேராபத்து? பொருளாதாரம் தலைகீழே விழும்?
இமயமலையின் மிகப்பெரிய பனிப்பாறைகள் வேகமாக உருகி, நேபாளத்தில் கோஷி, திரிசூலி ஆறுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், மாயங்கள் பதிவாகியுள்ளன. புவி வெப்பமயமாதலால் 2050க்குள் பனி உருகும் அளவு அதிகரித்து, கடலுக்கு நீர் சேர்வதால் நதிநீர் குறைந்து, கடுமையான நீர் பற்றாக்குறை, விவசாய சரிவு, உணவு பஞ்சம் உருவாகும் அபாயம் முன்வைக்கப்படுகிறது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
இமயமலையில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால், நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, பெருவெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உருகி, 300 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த வெள்ளத்தில் சிக்கி, இதுவரை ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு, இமயமலையில் உள்ள மற்ற பனிப்பாறைகளை, இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றன.
இந்த நிலையில், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால், பெரும் ஆபத்து வர இருப்பதாக, சமீபத்திய ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, புவி வெப்பம் அடைதல் காரணமாக, வழக்கத்தை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால், 2050-ஆம் ஆண்டுக்குள், பனி உருகும் அளவு அதிகப்படியாக உயர்ந்து, அந்த நீர் கடலில் கலந்துவிடும். எனவே, நதிகளில் நீர்வரத்து கடுமையாக சரிந்து, மிகக்கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2100-ஆம் ஆண்டுக்குள், தனது மொத்த பனிப்பாறைகளில் 80 சதவீதத்தை இமயமலை இழந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு சூழலியல் மாற்றங்கள் ஒருபுறம் நடந்தால், மற்றொருபுறம் இமயமலையை நம்பியுள்ள இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.8 லட்சம் கோடி ரூபாய் இமயமலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்து இருக்கிறது. இந்த பனிப்பாறைகள் உருகுவதும், அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களும் இந்திய பொருளாதாரத்தை பெரும் ஆபத்தில் தள்ளும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இமயமலைப் பனிப்பாறைகள் இயற்கையான நீர் சேமிப்புக் கிடங்குகளாகச் செயல்படுகின்றன. அங்கிருந்து உருவாகும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் நீரை நம்பியே வட இந்தியாவின் முழுமையான விவசாயமே சார்ந்து இருக்கிறது. எனவே, பனிப்பாறைகள் உருகுவதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவு பஞ்சம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு, புவி வெப்பமயமாதல் தான் காரணமாக இருக்கிறது. இதனை சரி செய்வதற்கு, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

