'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?'- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?'- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?'- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

''ஞானவாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.

ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ''ஞானவாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும். இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை சமரசமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கும்போது அது எப்படியிருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்குவது பொருத்தமற்றது. இந்துக்களும் முஸ்லிம்களும் வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில இடங்கள் மீது எங்களுக்கு சிறப்பு பக்தி இருந்தது. ஆனால் நாம் தினமும் ஒரு புதிய விஷயத்தை வெளியே கொண்டு வரக்கூடாது. நாம் ஏன் சர்ச்சையை அதிகரிக்க வேண்டும்? ஞானவாபி மீது நமக்கு பக்தி இருக்கிறது, அதை முன்னோக்கி நாம் ஏற்கெனவே வழிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?'' என்று அவர் கூறினார்.  

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனுவை வாரணாசி மாவட்ட விரைவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஞானவாபி மசூதி குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ''இந்த விவகாரங்களில் நீதிமன்றங்களே முடிவெடுக்கும். நீதிமன்ற உத்தரவு, அரசமைப்பு சாசனத்தை பாஜக உறுதியுடன் பின்பற்றும். எங்களை பொறுத்தவரை கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம். வலுவான இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அழைத்து செல்வோம். யாரையும் புறக்கணிக்க மாட்டோம்'' என்றார்.

இதையும் படிக்கலாம்: காஷ்மிரில் வங்கி மேனேஜர் மர்ம நபரால் சுட்டுக்கொலை; திடுக்கிட வைக்கும் CCTV காட்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com