'லைவ்' ஆன கேரள காவல்துறை நடவடிக்கை - விதிமீறிய 'இ புல் ஜெட்' சகோதர்கள் செய்தது என்ன?

'லைவ்' ஆன கேரள காவல்துறை நடவடிக்கை - விதிமீறிய 'இ புல் ஜெட்' சகோதர்கள் செய்தது என்ன?
'லைவ்' ஆன கேரள காவல்துறை நடவடிக்கை - விதிமீறிய 'இ புல் ஜெட்' சகோதர்கள் செய்தது என்ன?

ட்ராவல் வீடியோக்களை வெளியிட்டு யூடியூபில் பிரபலங்களாக வலம் வந்த 'இ புல் ஜெட்' சகோதர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை இப்போது கேரளாவில் பேசுபொருளாகியுள்ளது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

கேரளாவில் தற்போது 'இ புல் ஜெட்' (E Bull Jet) சகோதரர்கள் பற்றிய பேச்சுக்கள்தான் அதிகம். கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி பகுதியைச் சேர்ந்த லிபின், எபின் என்ற சகோதரர்கள்தான் இந்த 'இ புல் ஜெட்' சகோதரர்கள். இவர்கள் 'இ புல் ஜெட்' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். 1.73 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இந்த யூடியூப் சேனலின் கான்செப்ட், 'வேன் லைப்' டூரிசம். அதாவது தங்கள் வேனை வீடு போல் செட் செய்து, அதில் பயணம் மேற்கொண்டு ட்ராவல் வீடியோக்கள் வெளியிடுவது. கேரள யூடியூபர்களிடையே, இந்த ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. இதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் இந்த 'இ புல் ஜெட்' சகோதரர்கள் தான்.

இதற்கிடையே, இவர்கள் சமீபத்தில் புதிய வேன் ஒன்றை வாங்கி, அதில் கலர் கலர் விளக்குகள், வேனில் இவர்களின் உருவப்படம் என மோட்டார் வாகனத் துறையின் விதிகளை மீறி சட்டவிரோதமாக வடிவமைத்தாக கூறப்படுகிறது. 'நெப்போலியன்' எனப் பெயரிடப்பட்ட இந்த வேனை பிரமாண்ட முறையில் திறப்பு விழா போல் வைத்து கொண்டாடி இருக்கின்றனர்.

இந்த நிலையில் கேரள மோட்டார் வாகன துறையை சேர்ந்த அதிகாரிகள் இவர்களின் வண்டி வீடியோவை பார்த்து வீட்டுக்கே வந்து சோதனையிட்டுவர்கள், ஆர்டிஓ அலுவலகத்துக்கு இந்த வண்டியை கொண்டுவர சொல்லி இருக்கின்றனர். அதன்படி, ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சென்ற சகோதரர்கள் அதிகாரிகள் முன் சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.

அப்போது விதிகளை மீறி சட்டவிரோதமாக வடிவமைக்கப்பட்டதை கண்டித்த அதிகாரிகள், ரூ.52,000 அபராதம் விதித்து வண்டியை பறிமுதல் செய்தனர். இந்த அபராதத்தை செலுத்த மறுத்து அதிகாரிகளுக்கு எதிராக ஆர்டிஓ அலுவலகத்திலேயே கூச்சலிட்டனர் 'இ புல் ஜெட்' சகோதரர்கள். இதையடுத்து ஆர்டிஓ அலுவலக ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு வந்த போலீஸார் 9 பிரிவுகளின் கீழ் சகோதரர்கள் இருவரையும் கைது செய்து அதிரடி காட்டினர்.

கைது நடவடிக்கையின்போது சகோதர்கள் இருவரும் போலீஸ் நிலையத்துக்கு செல்ல மறுக்க, வலுக்கட்டாயமாக அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவங்களை எல்லாம் தங்கள் வலைப்பக்கத்தில் இரு சகோதரர்களும் லைவ் செய்து கொண்டிருக்க, அதனை பார்த்து அவர்களின் ஆதரவாளர்கள் கண்ணூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு திரண்டவர்களும் சகோதரர்களுக்கு ஆதரவாக கூச்சலிட்டுள்ளனர். மேலும், சகோதரர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதாகக் கூறி தங்கள் கோபத்தை காவல்துறையின் மீது வெளிப்படுத்தினர் ஆதரவாளர்கள். கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்ததால் தேவையில்லாத பதற்றம் ஏற்பட்டது. ஆதரவாளர்களில் சிலர் சகோதர்களை விடுவிக்கவிட்டால் `கேரளா பற்றி எரியும்' என்று மிரட்டும் தொனியில் பேசினர்.

மேலும் சிலரோ பாஜக எம்.பி சுரேஷ் கோபி, சிபிஐ எம்எல்ஏ முகேஷ் போன்றோருக்கு போன் செய்து சகோதர்களை விடுவிக்க உதவ வேண்டும் என பேசி அந்த ஆடியோவை வெளியிட்டனர். அதேநேரம் மற்ற ரசிகர்கள், #SaveNapolean #saveebulljet போன்ற ஹேஷ்டேக்குக பகிர்ந்துகொண்டனர்.

இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் சில மணிநேரங்களில் 'இ புல் ஜெட்' சகோதரர்கள் கேரளா முழுவதும் ட்ரெண்ட் ஆக தொடங்கினர். அவர்களை பற்றிய விவாதமும் பெருகியது. ஒரு பிரிவினர் சகோதரர்களை ஆதரிக்கும் அதே வேளையில், 'கேரளா பற்றி எரியும்' என்று பேசிய ரசிகர்களை எச்சரித்த கேரள காவல்துறை அவர்களில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

இதனிடையே, போலீஸ் கஸ்டடியில் இருந்த சகோதர்கள் இருவரும் அனைத்து நடைமுறைகளையும் முடித்த பிறகு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் பேசிய சகோதரர்கள் இருவரும், ''வண்டிக்கான வரியை செலுத்திவிட்டோம். வரி செலுத்திய பின்பும் அபராதம் விதித்தனர். இந்த தொற்றுநோய் காலத்தில் எப்படி ரூ.52,000 அபராதம் செலுத்த முடியும். அதிகாரிகள் எங்களைப் போன்ற ஏழை மக்களிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள். கேரள காவல்துறை எங்களை பயங்கரவாதிகள், கொலைகாரர்களைப் போல நடத்துகிறது. நாங்கள் அனுபவித்த இந்த கொடூரத்தை எதிர்காலத்தில் வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது" என்று அழுதுகொண்டே நீதிமன்றத்தில் பேசியிருக்கின்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சகோதர்களை நீதிமன்ற காவலில் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த அவர்கள், ஜாமீன் மனுவில் அபராதம் செலுத்த சம்மதித்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம், அந்த சகோதரர்கள் மீது போலீஸார் பதிந்த வழக்கில் இரண்டு பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை. இதனால் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com