எல்லையில் நடந்தது என்ன? பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்: ராகுல் சரமாரி கேள்வி

எல்லையில் நடந்தது என்ன? பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்: ராகுல் சரமாரி கேள்வி

எல்லையில் நடந்தது என்ன? பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்: ராகுல் சரமாரி கேள்வி
Published on

லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும், கற்கள், கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலின் போது சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், 2 வீரர்கள் என 3 பேர் வீர மரணமடைந்தததாக முதலில் ராணுவம் தெரிவித்தது.

அதன் பின்னர் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்ட ராணுவம் , சீன ராணுவத்தினரின் கல்வீச்சு மற்றும் இரும்புக் கம்பி தாக்குதலில் படுகாயமுற்ற மேலும் 17 பேர் உயரமான பகுதியில் நிலவும் உறைய வைக்கும் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் காயங்களால் உயிரிழந்ததாகவும் தெரிவித்தது. எனினும் மோதலில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து ராணுவ அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேற்று இரவு நிலவரப்படி கல்வான் பகுதியில் குவிக்கப்பட்ட படைகளை இரு நாடுகளும் விலக்கிக் கொண்டுவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எல்லையில் நிகழ்ந்த மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்?போதும். என்ன நடந்தது என்பது நமக்கு தெரிய வேண்டும்.

நம்முடைய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு தைரியம்?நம்முடைய நிலங்களை ஆக்கிரமிக்க அவர்களுக்கு என்ன தைரியம்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com