பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?

இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.
பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?

தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து  அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தடையாக உள்ளது.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவே சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்திலே பாஜகவின் பக்கம் இருந்த சிவசேனாவை, சரத் பவார் தன் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து "மகா விகாஸ் அகாடி" என்கிற கூட்டணியை உருவாக்கினார். அடிப்படையில் பாரதிய ஜனதாவை போலவே சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கையை தனது நிலைப்பாடாக கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுத்தலாகவே இருந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.

கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் விறுவிறுப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்தது.

மகாராஷ்டிராவை போலவே ஒருபுறம் வலுவான பாஜக என்றும், மற்றொருபுறம் இரண்டு கட்சிகள் ஒருங்கிணைந்து பெரும்பான்மை என்கிற சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் எதிர் கூட்டணியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஏற்பாடுகள் நடத்தி பாஜக பெரும்பான்மை பெற்றது.

ஆனால், இத்தகைய சூழல் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்த போதும், திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் கூட்டணியின் முன்னணி கட்சிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜக தன் பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்க அதிக வாய்ப்பு கிட்டவில்லை.

இதே போலவே பீகார் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணி யுகங்கள் சாதகமாக அமையவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆன நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்தாலும், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற்று, பாஜகவை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளி இருக்கிறார்.

கோவா போன்ற சில சிறிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பால் இழுத்து தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டி உள்ளது. அதேபோலத்தான் புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டணி அரசியல் அங்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள், ஆளும் கூட்டணியின் தலைமை அல்லது எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை என முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. எனவேதான் கட்சிகளை உடைப்பது அல்லது கூட்டணிகளை தன் வசதிக்கு உருமாற்றுவது போன்ற வியூகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எட்டாக்கனியாக உள்ளன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com