இந்தியாவின் டாப் ரேங்க் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரிப்பது ஏன்?
இந்திய மாணவர்கள் பலர் வெளிநாட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரும்புகிறார்கள் என்கிறது ஒரு முக்கிய ஆய்வு முடிவு. அந்த ஆய்வில் என்ன சொல்கிறார்கள் என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை, வெளிநாட்டுக் கல்வி என்பது கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியர்கள் பலர் தாய்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் கல்வி மற்றும் வேலைகளில் இருந்து வருகின்றனர். அதுவும் கல்விக்காக இந்தியாவில் புலம்பெயர்ந்தவர் கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. பெரும்பாலும் பள்ளிகளில் முதல் தரவரிசையில் தேர்வுபெற்ற மாணவர்கள் பலர் வெளிநாட்டுக் கல்வியை விரும்புகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவின் 'டாப்பர்ஸ் டிராக்கிங்' என்கிற ஆய்வை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி நிறுவனம் நடத்தி வந்து, அதன் முடிவு - விவரங்களை இந்த வாரம் வெளியிட்டது. அதன்படி, 1996 - 2015 ஆண்டு காலகட்டங்களில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் தரவரிசையில் தேர்ச்சி பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் படிப்பு மற்றும் வேலை செய்து வருகின்றனர். மேலும், இவர்களில் பெரும்பாலும் அமெரிக்காவில் குடியேறியவர்கள் அதிகம் என்கிறது ஆய்வு.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்தவரான சஞ்சயா பாரு, இது தொடர்பாக தகவல் சேகரித்துள்ளார். டெல்லியில் உள்ள சில பள்ளிகளில் இருந்து அவர் சேகரித்த தகவல்கள்படி, நூற்றாண்டின் தொடக்கத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 20 சதவீதம் பேர் பட்ட படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 2010-ல் 50 சதவீதமாகவும், 2019-ல் 70 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இப்படிச் சென்றவர்களில் பலர் இந்தியாவின் செல்வந்தர் குடும்பங்களைகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆய்வின் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படி வெளிநாடு சென்ற அதிக எண்ணிக்கையிலான என்.ஆர்.ஐ இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு "திரும்பி வராத" இந்தியர்களாக மாறிவிட்டனர். அவர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட தங்கள் புரவல நாடுகளுக்கு அதிக பங்களிப்பை வழங்குகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. உண்மையில் இவர்கள் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு வெளியே இருக்க விரும்புகிறார்கள்; ஏனென்றால், தங்கள் தாய்நாடு இனி தங்களை விரும்பவில்லை என்று அவர்கள் உணர்கிறார்கள். அந்நியப்படுதலின் இந்த உணர்வு, குறிப்பாக சிறுபான்மையினரிடையே இந்தப் போக்கு காணப்படுகிறது.
இதுதொடர்பாக பேசியுள்ள சஞ்சயா பாரு, ``ஆத்மநிர்பர் பாரதத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் புதுப்பிக்கப்பட்ட அழைப்புகளுடன் ஆண்டு முடிவடைந்தாலும், இந்தியாவின் சிறந்த - பிரகாசமான மாணவர்கள் வெளிநாட்டு குடியேற்றத்திற்கான திட்டங்களை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளனர். வெளிநாடுகளில் வாழ்வதற்கும் வெளிநாட்டிலிருந்து வேலை செய்வதற்கும் தெரிவுசெய்த இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு கவலையான போக்கு'' என்றுள்ளார்.
- மலையரசு