‘ஹெச்.சி.எல். - ஃபாக்ஸ்கான்’ செமிகண்டக்டர் ஆலை
‘ஹெச்.சி.எல். - ஃபாக்ஸ்கான்’ செமிகண்டக்டர் ஆலைweb

‘HCL + Fox’ | 3,700 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் ஆலையை உபியிடம் பறிகொடுத்ததா தமிழகம்? நடந்தது என்ன?

தமிழ்நாடு ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘ஹெச்.சி.எல். - ஃபாக்ஸ்கான்’ செமிகண்டக்டர் ஆலை உத்தர பிரதேசத்துக்குப் போனது பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Published on

மத்திய அரசு செமிகண்டக்டர் ஆலைகள் தொடங்க அனுமதி அளித்ததை முறையாகப் பயன்படுத்தி, முதலீடுகளைத் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர திமுக அரசு முயற்சி செய்யவில்லை. இதனால்தான் அந்த ஆலை உத்தர பிரதேசத்துக்குச் சென்றுவிட்டது என்று தமிழக பாஜக குற்றஞ்சாட்டியதுதான் இந்த விவாதத்தின் மையம்.

திமுக அரசை குற்றஞ்சாட்டிய பாஜக..

”தமிழ்நாட்டுக்கான தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் திமுக அரசு தவறவிடுகின்றது. மாறாக, உத்தர பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திவருகின்றன. இதனால் தமிழகத்தின் தொழில் வாய்ப்புகள் அங்கே போகின்றன” என்று குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான திருப்பதி நாராயணன்.

தமிழகத்தின் வாய்ப்பை மத்திய அரசு பறிக்கிறது..

இதுகுறித்து திமுக தரப்பில் கேட்டபோது, “தென் மாநிலங்களுக்கு வரும் தொழில் வாய்ப்புகளை வட மாநிலங்களை நோக்கி நகர்த்தும் வேலையை மோடி அரசு தொடர்ந்து செய்துவருவது ஊர் அறிந்த உண்மை. குஜராத்திலும், உத்தர பிரதேசத்திலும் விரைவில் தேர்தல் வரும் சூழலில், அங்குள்ள வாக்கு வங்கியைக் குறிவைத்து இப்போது நமக்கு வரும் வாய்ப்புகளை அங்கே நகர்த்துகின்றனர். இங்கு வந்து பார்த்துவிட்டு, நம் மாநிலத்தில் தொழில் தொடங்கும் ஆர்வத்தோடு வரும் தொழில் நிறுவனங்கள் அடுத்து இது தொடர்பாக மத்திய அமைச்சர்களைப் பார்த்ததும், நேராக குஜராத்துக்கோ, உத்தர பிரதேசத்துக்கோ சென்றுவிடுகின்றனர்.

இப்போதெல்லாம் ‘ஹெலிகாப்டர் டிப்ளமஸி’ என்றே இதற்கு பெயர் உருவாகிவிட்டது. தமிழ்நாட்டில் இப்போது நாங்கள் சொல்வதைத்தான் கர்நாடக அமைச்சரும் சமீபத்தில் கூறியுள்ளார். ஆக, இங்கே உள்ளே வாய்ப்புகளை கபளீகரம் செய்து அங்கே கொண்டுபோவதோடு, கூடவே எங்கள் மீதே பழியையும் போடுகிறது பாஜக” என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

எது எப்படியாயினும், ஒரு பெரும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது என்கிறார்கள் தொழில் துறையினர்.

செமிகண்டக்டர் துறையின் முக்கிய அம்சம் என்ன?

கடந்த கால் நூற்றாண்டு எப்படி கணினி துறை சார்ந்த பொருளாதாரப் பாய்ச்சலாக அமைந்ததோ, அப்படி அடுத்த கால் நூற்றாண்டின் பாய்ச்சல் செமிகண்டக்டர் துறை சார்ந்ததாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ஹெ.சி.எல். – ஃபாக்ஸ்கான் இரண்டும் சேர்ந்து 3,706 கோடி ரூபாயில் அமைக்கும் செமிகண்டக்டர் ஆலை ஒரு நல்ல தொழில் வாய்ப்பு. இப்போது அது உத்தர பிரதேச மாநிலத்தின் ஜேவர் நகரத்துக்குச் சென்றுவிட்டது.

செமி கண்டக்டர்
செமி கண்டக்டர்

சென்ற வாரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டதை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த ஆலையை அமைக்கும் இரு நிறுவனங்களுமே தமிழகத்துடன் தொடர்புடையவை என்பதாகும். ஹெச். சி.எல். நிறுவனத்தின் அதிபர் ஷிவ் நாடார் அடிப்படையில் ஒரு தமிழர். இன்னொரு நிறுவனமான தாய்வானின் ஃபாக்ஸ்கான் ஏற்கெனெவே தமிழ்நாட்டில் ஐபோன் செல்பேசிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதுடன், தமிழ்நாட்டில் ஒரு பில்லியன் டாலர் வரை தனது முதலீட்டை அதிகரிக்கப்போவதாகவும் அறிவித்துள் ளது.

தமிழ்நாடு இப்படியான வாய்ப்பை இழக்க கூடாது..

முன்னதாக இந்த ஆலை தமிழ்நாட்டில்தான் தொடங்கப்படவுள்ளதாகப் பேச்சு நிலவிவந்தது. தமிழக அரசு இந்த நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசிவந்ததாகவும் தகவல்கள் உலவிவந்தன. சொல்லப்போனால், இந்த ஆலையைக் கொண்டுவர பெரும் முனைப்பு காட்டிவந்த தெலங்கானாவிடமிருந்து தமிழகம் போட்டியில் முந்தி வாய்ப்பைப் பெற்றதாகவும்கூட பேசப்பட்டது.

இத்தகு சூழலில், இந்த ஆலை உத்தர பிரதேசம் சென்றதற்கான பின்னணி என்ன? உத்தர பிரதேச அரசு சலுகைகளை வாரி வழங்கியதா, தமிழக அரசு போட்டியில் பறிகொடுத்துவிட்டதா, அல்லது மத்திய பாஜக அரசு பின்னகர்வில் இந்த வாய்ப்பு வடக்குக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டதா என்ற கேள்வி தொழில் துறையினரிடம் வெகுவாக பேசப்பட்டுவருகிறது. பின்னணி எதுவாயினும் அடுத்து ஒரு வாய்ப்பை இப்படி தமிழகம் விட்டுவிடக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com