அக்டோபர் 7-ல் காந்தி ஜெயந்தி! குஜராத்தில் தொடரும் வித்தியாசமான பாரம்பரியம்! என்ன காரணம்?
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியே காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், குஜராத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் மட்டும் காந்தியின் பிறந்தநாளை அக்டோபர் 7ஆம் தேதி கொண்டாடி வருகிறது. காந்தியின் பிறந்தநாளை இந்தப் பல்கலைக்கழகம் மட்டும் அக்டோபர் 7ஆம் தேதி கொண்டாடுவதற்கான காரணம் என்ன?..இதற்கான பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது
அகமதாபாத்தில் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட குஜராத் வித்யாபீடம் என்ற பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் செயல்பட்ட கல்வி முறைக்கு மாற்றாக, தேசிய கல்வியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலுடன் குஜராத் வித்யாபீடம் 1920ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளை ‘ரெந்தியா பரஸ்’ என்ற பெயரில் அக்டோபர் 7ஆம் தேதி அனுசரித்துள்ளது. இதற்குப் பின்னால் சுவாரஸ்யமான வரலாறும், காந்தியின் சுதேசி கொள்கையுடன் தொடர்புடைய ஒரு பாரம்பரியமும் இருக்கிறது.
மகாத்மா காந்தி 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதிபிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குஜராத் வித்யாபீடம் காந்தியின் பிறந்தநாளை கிரிகோரியன் நாட்காட்டியின்படி மட்டுமல்லாமல், விக்ரம் சம்வத் என்ற நேபாள நாடு நாட்காட்டியின் படியும் அனுசரித்து வருகிறது. விக்ரம் சம்வத் கணக்குப்படி, காந்தி பிறந்தது பாத்ரபத என்ற மாதத்தின் தேய்பிறை 12ஆம் நாளான ‘பாதர்வ வத் பாரஸ்’ அன்று எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த பாரம்பரியக் கணக்குப்படி, 2026ஆம் ஆண்டில் காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 7ஆம் தேதியாக வருகிறது. அதனால்தான் குஜராத் வித்யாபீடம் இந்த நாளை ‘ரெந்தியா பரஸ்’ என்ற பெயரில் காந்தி பிறந்த தினமாக கொண்டாடுகிறது. ஆனால், இந்த ‘ரெந்தியா பரஸ்’ என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? குஜராத்தியில் ‘ரெந்தியா’ என்றால் ராட்டை அல்லது நூல் நூற்கும் சுழல் கருவி என்று பொருள்.காந்தியின் வாழ்க்கையிலும், அவரது சுதேசி இயக்கத்திலும் ராட்டைக்கு மிக முக்கியமான இடம் இருந்தது.
காந்தியைப் பொறுத்தவரை, ராட்டை என்பது வெறும் நூல் நூற்கும் கருவி மட்டுமல்ல. அது சுதேசி, சுயசார்பு, உழைப்பின் கண்ணியம் மற்றும் காலனித்துவ பொருளாதாரத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. அதனால்தான், காந்தியின் பிறந்தநாளை அவர் வலியுறுத்திய ராட்டை மற்றும் சுதேசி சிந்தனைகளுடன் இணைத்து, ‘ரெந்தியா பரஸ்’ என்ற பெயரில் கொண்டாடும் பாரம்பரியம் உருவானது. இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, குஜராத் வித்யாபீடம் இந்த ஆண்டும் காந்தியின் பிறந்தநாளை ராட்டையுடன் இணைத்து கொண்டாடியுள்ளது.
உலகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், குஜராத் வித்யாபீடம் அக்டோபர் 7ஆம் தேதியை விக்ரம் சம்வத் கணக்குப்படி காந்தியின் பிறந்தநாளாக அனுசரித்திருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
