இந்திய விமான சேவை பாதிப்புக்குள்ளாக என்ன காரணம்..? ஏன் இண்டிகோ பாதிக்கப்பட்டால் தேசமே பாதிப்பாகிறது?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ஒவ்வொரு நாளும் முடங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்து நிற்கின்றனர். விமானக் கட்டணம் ஒரு லட்ச ரூபாய் வரை எகிறியிருக்கிறது. இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக 10 விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவையில் இயங்குகின்றன. இவற்றில் இண்டிகோ நிறுவனம் ஏன் இப்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது? ஏன் இண்டிகோ நிறுவனம் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்திய விமான சேவையும் பாதிப்புக்குள்ளாகிறது? பார்க்கலாம்!
அதிகப்படியான சேவைகளை வழங்கும் இண்டிகோ!
இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக 10 நிறுவனங்கள் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டிருந்தாலும், முக்கியமானவை ஐந்துதான்! இண்டிகோ, ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ஆகாஸா ஏர், ஸ்பைஸ் ஜெட். இவற்றில் அதிகமான விமான சேவைகளை - அதாவது கிட்டத்தட்ட - 65 சதவீத - விமான சேவைகளை இயக்குவது இண்டிகோதான்! அதாவது, இந்தியாவின் பெரிய நிறுவனம் மட்டும்அல்ல; இந்திய விமான சேவையின் முதுகெலும்பாகவும் இன்று இண்டிகோ திகழ்கிறது.
இந்த இடத்துக்கு இண்டிகோ எப்படி வந்தது என்றால், அதன் சிக்கனமான நிர்வாகத்தால் தான். அதாவது, 150 விமானங்களைக் கொண்டு உள்நாடு, வெளிநாடு என்று மொத்தம் 600 விமானசேவைகளை ஏர் இண்டியா நடத்துகிறது என்றால், 418 விமானங்களைக் கொண்டு கிட்டத்தட்ட 2,300 உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகளை நடத்துகிறது இண்டிகோ. அதாவது, ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிட குறைந்த ஊழியர்கள், அதிகமானவேலை, அதற்கேற்ற சம்பளம்; இதற்கேற்ப லாபம் எனும் வியாபார மாதிரியைக் கொண்டு இயங்கியது இண்டிகோ.
அதாவது, தன்னுடைய சகபோட்டியாளரான ஏர் இண்டியா ஒருவிமானத்தைக் கொண்டு ஒரு நாளைக்கு 10 முதல் 11 மணி நேரம் வரை பயன்படுத்துகிறது என்றால், இண்டிகோ ஒரு விமானத்தை 14 முதல் 15 மணி நேரம் வரை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அதேபோல, பொதுவாக பல விமான நிறுவனங்களும் அபாயங்கள் மிகுந்த நேரம் என்று தவிர்க்கக்கூடிய நள்ளிரவு நேரப்பயணங்களிலும் அதிக கவனம்செலுத்தியது இண்டிகோ.
புதிய விதியால் நிலைகுலைந்த இண்டிகோ..
சர்வதேச சிவில் விமான அமைப்பினுடைய பரிந்துரைகளின் தொடர்ச்சியாக, இந்திய அரசு தன்னுடைய விதிகளை சமீபத்தில் புதுப்பித்தது. விமானிகளின் நலனையும் பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு, விமானிகளுக்கான பணி நேரத்தைக் குறைத்து, அவர்களுக்கான ஓய்வு நேரத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த விதி மாற்றம்தான் இண்டிகோவின் இயக்கத்தை நிலைகுலைய வைத்தது. ஒவ்வொரு விமானியின் சவாரி எண்ணிக்கையையும் புதிய விதி குறைப்பதோடு, இரவு நேர விமான இயக்க எண்ணிக்கையையும் மட்டுப்படுத்துகிறது.
வேறுவார்த்தைகளில் இதைச் சொல்லவேண்டும் என்றால், ஏற்கெனவே இயக்கிவந்த 2,300 சேவைகளைப் புதியவிதி மாற்றங்களின் கீழும் இண்டிகோ தொடர வேண்டும் என்றால், மேலும் பலநூறு விமானிகளையும் ஊழியர்களையும் வேலைக்கு எடுக்கவேண்டும் அல்லது சேவைகளைக்குறைக்க வேண்டும்.
இந்தப் புதிய விதி மாற்றத்துக்கு இண்டிகோ உரிய வகையில் திட்டமிடவில்லை. அதன் விளைவாகவே பெரும் சிக்கலில் தானும் சிக்கி பல்லாயிரக்கணக்கான பயணிகளையும் சிக்கலில் தள்ளியது இண்டிகோ.
இந்திய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், நிறைந்த சேவையை இண்டிகோ நிறுவனம் சாத்தியப்படுத்தினாலும், அடிப்படையில் அது உருவாக்கியுள்ள வியாபார மாதிரியானது, ஊழியர்களை அதிகம் வேலை வாங்கக் கூடியது; மக்களின் பாதுகாப்பை பணயம் வைக்கக் கூடியது எனும் விமர்சனம் எப்போதுமே உள்ளது. இந்திய அரசு இந்தவிஷயத்தில், மக்களின் பாதுகாப்பைக்காட்டிலும் விமான நிறுவனங்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது; தவிர, விமான சேவைதுறையைக் கட்டுப்படுத்துவதில் மறைமுகமாக இண்டிகோ அரசை வளைக்கிறது; அரசும் வளைகிறது எனும் குற்றச்சாட்டுகளும் உண்டு.
இந்தப்பின்னணியில் தான் விமானத் துறையில் ஒரு நிறுவனத்தின் ஏகபோக வளர்ச்சிக்குத் துணை நின்றால் என்னவாகும் என்பதற்கு சமீபத்தியநிகழ்வுகள் உதாரணம் என்று சாடினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
நிலைமையைச் சமாளிக்க இரவு நேரப் பயணங்களுக்கு கொண்டுவந்த விதிகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது அரசு. இண்டிகோவும் விரைவில் நிலைமையைச் சீரமைக்க ஏனைய ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளும் வகையில், இண்டிகோவுக்கு வளைந்து கொடுப்பது நிரந்தரத் தீர்வாகாது என்று கூறுகின்றனர் விமானச் சேவைத் துறை நிபுணர்கள்!

