”என்னை மன்னித்துவிடுங்கள்” -விஜய்சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் கதறல் பேட்டி
விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்ததற்காக தன்னை மன்னித்துவிடுமாறு, அந்த ட்விட்டைப் பதிவு செய்த நபர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் 800. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், ஈழத்தமிழர்களுக்கு முத்தையா துரோகம் செய்திருப்பதால் அவரது வாழ்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து முத்தையா தரப்பில் இருந்து விளக்கம் வந்த போதிலும் எதிர்ப்பு குரல்கள் நின்ற பாடில்லை. அதனையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு முத்தையா அறிக்கை வெளியிட்டதற்கு இணங்க, அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த சேதுபதி ’நன்றி வணக்கம்’ என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனிடையே ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இலங்கையைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது. விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த நபருக்கு பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
அந்த நபரை தற்போது IBC தமிழ் பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டியில் சம்பந்தப்பட்ட நபர் பேசும் போது “ விஜய் சேதுபதி மற்றும் அவரது மகளை பற்றி தவறாக பேசிய இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கை பிரஜை நான் தான். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இதற்கு மன்னிப்பு கிடையாது என்பது தெரியும். நான் ஏன் அவ்வாறு பேசினேன் என்றால் கொரோனா தொற்று காரணமாக வீழ்ந்த பொருளாதாரத்தால் எனக்கு வேலை பறிபோனது. மேலும், விஜய் சேதுபதி இலங்கை யுத்தத்தைப் பற்றி தெரிந்தும் கூட இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்ற ஆதங்கத்திலே அந்த ட்விட்டை நான் பதிவிட்டேன். இதற்காக விஜய் சேதுபதி, அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.