கொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி - பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள் 

கொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி - பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள் 
கொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி - பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள் 
மலேசியாவில் கடந்த மாத இறுதியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்று தற்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 
டெல்லியைச் சேர்ந்த மத அமைப்பு ஒன்றின் சார்பில் மலேசியாவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த மாத இறுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் அந்நாட்டினருடன் இந்தியா, தாய்லாந்து, இந்தோனோஷியா, சீனா எனப் பல நாடுகளிலிருந்து சுமார் 15,000 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தாக்கியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 900 பேரில் பாதிபேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்தான் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் மூலம் அந்தந்த நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது மேலும் உறுதியாகியுள்ளது. 
மலேசியாவிற்கு அடுத்தபடியாக டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்கள் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து சுமார் 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும் தாய்லாந்து, மலேசியா, இந்தோனோஷியா போன்ற நாடுகளிலிருந்தும் பலர் இதில் பங்கேற்றுள்ளனர். 
இந்நிலையில் இதில் பங்கேற்ற சுமார் 285 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர்.
 இது தவிரத் தமிழகம், கர்நாடகா, காஷ்மீரைச் சேர்ந்த தலா ஒருவரும் பிலிப்பைன்சை சேர்ந்த ஒருவரும் இறந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு நபர்கள் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். இவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த சிலர் ஈரோட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்கும் இவர்களுடன் தொடர்பிலிருந்த சிலருக்கும் கொரோனா தாக்கிய நிலையில் ஈரோடு அருகே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் சென்றதாகவும் இதில் 16 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உஷாரான டெல்லி அரசு, மதக் கருத்தரங்கு நடந்த நிஜாமுதீன் பகுதியிலிருந்த 163 பேரை கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 
இதற்கிடையில் இக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்த மதகுரு மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா மாநிலத்தவர்கள் ஆறு பேர் இரு நாட்களில் அடுத்தடுத்து இறந்த நிலையில், கருத்தரங்கில் பங்கேற்ற நபர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதிக்கும் பணியை அம்மாநில அரசு தொடக்கியுள்ளது. 
டெல்லி நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் பங்கேற்ற நிலையில் அவர்களால் அந்நாட்டில் கொரோனா பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர ஏற்கனவே மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்லாந்து, கம்போடியா, புரூனே, இந்தோனேஷியா ஆகிய  நாடுகளைச் சேர்ந்தவர்களையும் கொரோனா தாக்கியுள்ளது.  கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி சங்கிலித் தொடர் போன்ற நோய் பரவலுக்குக் காரணமாகி தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய தொற்று பரவல் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ் கவலையுடன் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com