டெல்லியில் அதிகரிக்கும் ஏசி வெடிப்புகள்.. காரணம் என்ன? தடுக்க வழிகள் யாவை?
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Delhi-NCR)வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் ஏசிகள் (Air Conditioners) திடீரென வெடித்துச் சிதறி தீ விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து அறிவோம்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் குளிர்காலத்திலும் சரி, கோடைக்காலத்திலும் சரி.. அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில்தான் உலகம் முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இது, டெல்லியையும் தாக்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் மிகக் கடுமையான வெப்ப அலை காரணமாக, வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் ஏசிகள் திடீரென வெடித்துச் சிதறி தீ விபத்துகள் ஏற்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, நொய்டா செக்டார் 119-ல் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் 21-வது மாடியில் ஏசி வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் உயிரச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள ஹவுஸ் காஸ் (Hauz Khas) பகுதியில், வீட்டின் உள் யூனிட் (Indoor Unit) வெடித்ததில், இந்தியப் போட்டி ஆணையத்தின் (CCI) முதல் தலைவரான தனேந்திர குமார் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்து, விவேக் விஹார் பகுதியில் ஏசி வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வீட்டின் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் ஜன்னல் கிரில்கள் காரணமாக வெளியேற முடியாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர்.
இப்படி, ஏசி இயந்திரங்கள் திடீரென வெடிப்பது குறித்து அதன வல்லுநர்கள், “கோடையில் வெப்பநிலை 45°C-க்கும் மேல் செல்லும்போது, அறையைக் குளிர்விக்க ஏசியின் வெளிப்புற யூனிட்டில் உள்ள கம்ப்ரஸர் மிகக் கடுமையாக இயங்க வேண்டியிருக்கும். 24 மணி நேரமும் இடைவிடாமல் ஏசியை இயக்கும்போது, கம்ப்ரஸர் ஓய்வில்லாமல் சூடாகி ஒருகட்டத்தில் வெடிக்கிறது. தவிர, ஏசியின் கன்டென்சர் காயில்களில் தூசி மற்றும் அழுக்குகள் படிந்திருந்தால், ஏசியால் வெப்பத்தை முறையாக வெளியேற்ற முடியாது. இதனால் உள் அழுத்தம் அதிகரித்து கம்ப்ரஸர் செயலிழக்கும். அதுபோல், கோடைக்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தரம் குறைந்த ஒயர்களைப் பயன்படுத்துவதால் ஒயர்கள் உருகி ஷார்ட் சர்க்யூட் ஏற்படுகிறது.
மேலும், ஏசியில் குளிர்ச்சியைத் தரும் வாயுக் குழாய்களில் ஏற்படும் விரிசல் காரணமாகக் ரெஃப்ரிஜரண்ட் கேஸ் கசிவு கசியக்கூடும். இந்த வாயு காற்றில் பரவி இருக்கும்போது, மின்சாரக் கம்பிகளில் இருந்து ஒரு சிறிய பொறி உருவானால்கூட அது பெரிய வெடிப்பை ஏற்படுத்திவிடும்” என்கின்றனர் அவர்கள். மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். “ஏசி வழக்கத்திற்கு மாறான சத்தம் எழுப்பினாலோ, குளிர்ச்சி குறைந்தாலோ அல்லது லேசான கருகிய வாசனை வந்தாலோ உடனடியாக ஏசியை அணைக்க வேண்டும். ஏசியைத் தொடர்ந்து பல மணி நேரம் இயக்கக் கூடாது. 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏசியை அணைக்க வேண்டும். அதன் கம்ப்ரஸர் குளிரடைய 30 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும். டைமர் வசதியைப் பயன்படுத்துவது நல்லது. அவ்வப்போது தகுதியான வல்லுநர்களைக் கொண்டு ஏசியைச் சர்வீஸ் செய்ய வேண்டும். கேஸ் கசிவு மற்றும் ஒயரிங் தரத்தை சரிபார்ப்பது அவசியம்” என எச்சரிக்கின்றனர் அவர்கள்.

