தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் - ஜார்க்கண்ட் ஆட்சி யாருக்கு..?
ஜார்க்கண்ட் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என கணிப்புகள்
தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முதல், இன்று வரை தேர்தல் நடந்தது. இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதைத்தொடர்ந்து வரும் திங்கட்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஜார்க்கண்டில் 79 இடங்களில் போட்டியிட்ட பாஜக 22 முதல் 32 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, 31 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 12 - 18 இடங்களில் வெற்றி பெறும் எனவும், 43 இடங்களில் போட்டியிட்ட அதன் கூட்டணிக்கட்சியான ஜே.எம்.எம் 24 - 28 இடங்களை கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களது கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்ட ராஜ்டிரிய ஜனதா தளம் 2 - 4 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 81 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட ஜே.வி.எம் கட்சி 2 - 4 இடங்களை கைப்பற்றலாம் எனவும், 53 இடங்களில் போட்டியிட்ட ஏ.ஜே.எஸ்.யு 3 - 5 இடங்களை கைப்பற்றலாம் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் சுயேச்சைகள் அல்லது பிற கட்சியினர் 4 - 7 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாக்குகள் சதவிகித்தை பொறுத்தவரையில் பாஜக 34%, காங்கிரஸ் கூட்டணி 37%, ஏ.ஜே.எஸ்.யு 9%, ஜேவி.எம் 6% மற்றும் சுயேட்சைகள் அல்லது பிற கட்சியினர் 14% பிடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.